Sunday, July 30, 2023

காலிஃப்ளவர் பிரட்டல்/ Cauliflower stir fry

 தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் - 1 சிறியது

தக்காளி -1/2

வெங்காயம் - 1

மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

கறிமசால் தூள் - 1/8 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பலை - சிறிது

செய்முறை

காலிஃப்ளவரை சிறிதாக வெட்டி நீரில் கழுவி எடுத்து கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு (காலிஃப்ளவர் மூழ்கும் அளவுக்கு) தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் வெட்டிவைத்தள்ள காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து 3 லிருந்து 4 நிமிடங்கள் மூடி வைக்கவும். 4 நிமிடங்களுக்குப் பிறகு காலிஃப்ளவர் துண்டுகளை தண்ணீரை வடித்துவிட்டு எடுத்துவைக்கவும். வெங்காயம், தக்காளியை சிறியதாக வெட்டவும். ஒரு வாணலியை சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியபின் மிளகாய்த்தூள், கறிமசால் தூள், கறிவேப்பிலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியபின் காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து மசாலா நன்கு காலிஃப்ளவர் துண்டுகள் மீது படும்வரை பிரட்டவும். பின்பு அதை மூடி வைத்து காலிஃப்ளவர் வேகும்வரை வைத்திருந்து இறக்கி பரிமாறவும். 



Friday, July 28, 2023

பழம் பொரி/Banana Fritters

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவின் மிகப் பிரபலமான தின்பண்டங்களில் ஒன்று இந்த பழம் பொரி. இது நேந்திரம் பழத்தில் அதுவும் நன்கு கனிந்த பழத்தில் செய்தால் இதன் சுவை அபாரமாக இருக்கும். 

தேவையான பொருட்கள்

நேந்திரம் பழம் -2

மைதா மாவு - 1/2 கப்

அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

தூள்உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,அரிசி மாவு, சர்க்கரை, தூள்உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். நேந்திரம் பழத்தின் தோலை உரித்து நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். பஜ்ஜிக்கு வெட்டுவது போல் நீள வாக்கில் அதே நேரத்தில் சிறிது தடிமனாக வெட்டிக் கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெட்டி வைத்துள்ள பழத்துண்டுகளை, கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து பொரித்து எடுத்தால் பழம் பொரி தயார்.



Sunday, July 23, 2023

இறால் கறி / Prawn Curry

தேவையான பொருட்கள்

இறால் -1 கிலோ

சின்ன வெங்காயம் - 20 எண்ணம்

தக்காளி - 2

பச்சை மிளகாய் -2

குடை மிளகாய் துண்டுகள் - 1/2 கப்

இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்

மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்

மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

பட்டைத்தூள் - 1/8 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

உப்பு - தே.அளவு

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

மல்லி தழை - சிறிது

செய்முறை

இறாலைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.  ஒரு கடாயை சூடாக்கி அதில் எண்ணைய் விட்டு சூடானதும் சோம்பு சேர்த்து பொரிந்தவுடன், பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கி மசிந்த பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.பின்பு அதனுடன் மிளகாய்த் தூள், மல்லித்தூள்,மிளகுத்தூள்,பட்டைத்தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கிய பின் வெட்டிய குடைமிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் இறால் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலா இறாலின் மீது படும் வரை நன்கு பிரட்டவும். பின்பு கடாயை மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும். கடாயைத் திறந்து கறிவேப்பிலை மற்றும் மல்லி இலை சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.


Monday, July 17, 2023

ராகி/கேழ்வரகு இட்லி, Ragi Idly

ராகி/கேழ்வரகு, சிறு தானிய வகையைச்சேர்ந்தது. ராகியில் அதிக அளவு கால்சியம் உள்ளது. அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் அதிக அளவு கால்சியம் தேவைப்படுவதால் ராகியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ராகியில் பலவிதமான உணவு பதார்த்தங்கள் செய்யலாம். ராகி தோசை,ராகி இட்லி,ராகி புட்டு,ராகி இடியாப்பம்,ராகி கொழுக்கட்டை,ராகி ஆப்பம் என்று அரிசியில் என்னவெல்லாம் செய்யலாமோ அத்தனையும் ராகியிலும் செய்து அசத்தலாம். வாரத்தில் 3 நாட்களாவது ராகி உணவு எடுத்துக்கொள்வது அவசியம்.

தேவையான பொருட்கள்

ராகி/கேழ்வரகு மாவு - 1 கப்

இட்லி அரிசி - 3 கப்

உளுந்து - 1 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

உளுந்தை 3 முறை நன்றாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, உளுந்து ஊற ஏற்ற அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். அதேப் போன்று அரிசியையும் 3 முறை நன்றாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அரிசி ஊற ஏற்ற அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். 4 மணி நேரத்திற்கு பிறகு முதலில் உளுந்தை மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். அதேப் போன்று அரிசியையும் மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த உளுந்தையும் அரிசியையும் ஒன்றாகக் கலக்கவும். அதனுடன் ராகி மாவையும் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். 8 மணி நேரத்திற்கு பிறகு மாவை ஒரு கரண்டியால் கலக்கி பின்பு இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுத்தால் ஆரோக்கியமான ராகி இட்லி தயார். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது சாம்பார் நன்றாக இருக்கும்.

குறிப்பு

ராகி மாவு இல்லையென்றால் முழு ராகியை 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து, உளுந்து அரிசி மாவுடன் கலக்கலாம்.

ஒரு கப் ராகி மாவு மட்டுமே சேர்ப்பதால் அரிசி இட்லிக்கும் ராகி இட்லிக்கும் ருசியில் பெரிய வித்தியாசம் தெரியாது. அதனால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்கள் மட்டுமே சாப்பிடுவதாக இருந்தால் 2 கப் ராகி, 2 கப் இட்லி அரிசி சேர்த்துக் கொள்ளலாம்.



மேலும் சில ராகி ரெசிபிகளை பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்.

ராகி இடியாப்பம் ரெசிபியை காண இங்கே க்ளிக் செய்யவும்.


ராகி புட்டு ரெசிபியை காண இங்கே க்ளிக் செய்யவும்.




Thursday, July 13, 2023

ராகி இடியாப்பம்/கேழ்வரகு இடியாப்பம், Ragi Idiyaappam

ஆரோக்கியமான அதே நேரத்தில் சுவையான கேழ்வரகு இடியாப்பம் செய்வது மிகவும் சுலபம். இனிப்பு இடியாப்பம் செய்முறை இது. இனிப்பு இடியாப்பம் விரும்பாதவர்கள் சர்க்கரையை தவிர்த்து விட்டு, தொட்டுக்கொள்ள முட்டைக் குழம்பு அல்லது பட்டாணி குருமா சேர்த்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

ராகி/கேழ்வரகு மாவு - 2 கப்

தண்ணீர் - 1 3/4 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்

நாட்டுசர்க்கரை - 1/4 கப் அல்லது சுவைக்கேற்ப

தூள்உப்பு - தேவையான அளவு

செய்முறை

ஒரு அகன்ற பாத்திரத்தில் கேழ்வரகு மாவை எடுத்துக் கொண்டு அதனுடன் தூள் உப்பு சேர்த்து நன்கு கலக்கவும்.மற்றொரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். அந்த கொதிக்கும் தண்ணீரை கேழ்வரகு மாவில் சிறிது சிறிதாக ஊற்றி ஒரு கரண்டியின் உதவியுடன் கலக்கவும். கரண்டியை வைத்தே மாவை பிசைந்து கை பொறுக்கும் சூடு வரும்வரை மூடி வைக்கவும். தேங்காய்துருவலையும் நாட்டுசர்க்கரையும் கலந்து வைக்கவும். கை பொறுக்கும் சூடு வந்தவுடன் இடியாப்ப அச்சில் மாவை சேர்த்து, இட்லி தட்டில் பிழியவும். தேங்காய்துருவலும் நாட்டுசர்க்கரையும் கலந்த கலவையை அதன் மீது தூவி இட்லி குக்கரில் ஆவியில் வேக வைத்து எடுத்தால் சுவையான ஆரோக்கியமான இடியாப்பம் தயார்.


மேலும் சில ராகி ரெசிபிகளை பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்.

ராகி இட்லி ரெசிபியை காண இங்கே க்ளிக் செய்யவும்.


ராகி புட்டு ரெசிபியை காண இங்கே க்ளிக் செய்யவும்.




Wednesday, July 12, 2023

வறுத்தரைத்த கோழி குழம்பு, chicken curry made with roasted coconut

தேவையான பொருட்கள்

கோழிக்கறி -1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 15 எண்ணம்

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்

தேங்காய் துருவல் - 3/4 கப்

மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

மல்லித்தூள் - 1 1/2 ஸ்பூன்

பட்டைத்தூள் - 1/8 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

நட்சத்திரபூ -1

கிராம்பு - 4 எண்ணம்

கல்பாசி - சிறிது

உப்பு - தே.அளவு

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

மல்லி தழை - சிறிது

செய்முறை

கோழிக்கறியை கழுவி, சிறிதாக அரிந்து கொள்ளவும்.  ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் தேங்காய் துருவலைச் சேர்த்து அதைக் கிளறவும். அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறவும். தேங்காய்த்துருவல் பொன்னிறமாக மாறும் வரை பொறுமையாக வறுக்கவும். பொன்னிறமாக மாறியதும் அதனுடன் சோம்பு,நட்சத்திரபூ ,கிராம்பு,கல்பாசி சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும். அதன் பிறகு மல்லித்தூள்,மிளகாய்த்தூள்,பட்டைத்தூள், சேர்த்து 1 நிம்டம் வறுத்துவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு தட்டிற்கு மாற்றி ஆற வைக்கவும். இப்போது வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு சிறிது சோம்பு சேர்க்கவும். பின்பு பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கி மசிந்த பின் இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள் சேர்த்து வதக்கவும்.பின்பு அதனுடன் கோழிக்கறியைச் சேர்த்து கிளறவும். அதனுடன் உப்பு சேர்த்து மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும். அதற்கிடையே வறுத்து ஆற வைத்திருக்கும் தேங்காய் கலவையை மிக்சியில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த தேங்காயை வெந்துகொண்டிருக்கும் கோழிக்கறியுடன் சேர்த்து குழம்புக்கு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதி வந்த பிறகு குழம்புக்குத் தேவையான உப்பு சேர்க்கவும். ஏற்கெனவே கோழிக்கறிக்கு உப்பு சேர்த்திருப்பதால், சிறிதளவு உப்பே குழம்புக்குத் தேவை. அதனால் குழம்பை சுவை பார்த்த பிறகே குழம்பிற்குத் தேவையான உப்புச் சேர்க்கவும். குழம்பு நன்கு கொதித்து, கோழிக்கறி வேகும் வரை வைத்திருந்து பின்பு கறிவேப்பிலை மற்றும் மல்லி இலை சேர்த்து இறக்கவும்.



Thursday, July 6, 2023

மட்டன் மசாலா - Mutton Masala

 சுலபமான முறையில் இந்த மட்டன் மசாலா செய்யலாம். அதிக வேலையிருக்கும் நாட்களில் அல்லது சோம்பலான நாட்களில் அவசர அவசரமாக மட்டன் சமைக்க ஏற்ற முறை இது.

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி -1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 15 எண்ணம்

இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்

மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

மல்லித்தூள் - 1 ஸ்பூன்

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

பட்டைத்தூள் - 1/8 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

நட்சத்திரபூ -1

கிராம்பு - 4 எண்ணம்

உப்பு - தே.அளவு

கறிவேப்பிலை - சிறிது

மல்லி தழை - சிறிது

செய்முறை

ஆட்டுக்கறியை கழுவி ஒரு குக்கரில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்,இஞ்சி பூண்டுவிழுது,மஞ்சள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மிளகுத்தூள்,பட்டைத்தூள்,சோம்பு,நட்சத்திரபூ,கிராம்பு,உப்பு,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும். கொதிவந்ததும் குக்கரை மூடி வெயிட் போடவும். சுமார் 20 லிருந்து 25 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து வேகவைத்து இறக்கவும். பின்பு மல்லி தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு

ஆட்டுக்கறியை குறைந்த தீயில் வேகவைப்பதால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அதிக தீயில் வேகவைப்பதாக இருந்தால் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.



Monday, July 3, 2023

மிளகு ரசம் எளிதான முறையில் - Pepper Rasam

அதிக வேலையில்லாமல் எளிதான முறையில் இந்த ரசத்தை செய்யலாம். சளித்தொல்லை இருக்கும் சமயத்தில் இந்த ரசம் வைத்து சோறு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

மிளகு - 15 எண்ணம்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 6 பற்கள்(சிறியது)
பெருங்காயப்பொடி - 1/8 டீஸ்பூன்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - சிறிது
உப்பு - தே.அளவு
கறிவேப்பலை - சிறிது
மல்லி தழை - சிறிது

செய்முறை

முதலில் புளியை 1/2 கப் நீரில் ஊற வைக்கவும். மிக்ஸி ஜாரில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து ஒரு சுற்று ஓடவிடவும். மிளகு மற்றும் சீரகம் ஒன்றிரண்டாக உடைந்திருக்கும். இதனுடன் பூண்டு, பெருங்காயப்பொடி, மஞ்சள் மற்றும் தக்காளி சேர்த்து அரைத்து எடுக்கவும். அடுப்பில் வாணலி வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும், பின்பு கடுகு சேர்த்து வெடித்ததும் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்க்கவும். அதனுடன் ஊறவைத்திருக்கும் புளியை கரைத்து வடிகட்டி சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு நீர், உப்பு, கறிவேப்பலை சேர்த்து மூடி வைக்கவும். கொதித்து பொங்கி வரும் போது மல்லி தழை சேர்த்து இறக்கவும். சுவையான மிளகு ரசம் தயார்.