Musselsஐ சிப்பி/தோடு என்றே கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அழைப்பார்கள். கடலோர மாவட்டம் என்பதால் பலவகையான மீன்கள் இங்கு கிடைக்கும். அதில் ஒரு வகை இந்த சிப்பி/தோடு. இந்த சிப்பி பெரும்பாலும் டிசம்பர் மாதங்களில் தான் கிடைக்கும். சிப்பியை சிங்கப்பூர் ஈரச்சந்தையில் பார்த்தவுடன் ஆவலுடன் வாங்கி பொரியல் செய்தாகிவிட்டது. கடலுணவு விரும்பிகளுக்கு சிப்பி பெரிய விருந்து என்றே சொல்லலாம். சிப்பி வாங்கும் போது பெரியதாகவும் கனமானதாகவும் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும். அப்போது தான் இதன் இறைச்சி பெரியதாக இருக்கும். பெரிய இறைச்சி தான் சாப்பிட நன்றாக இருக்கும். சுத்தம் செய்வதற்கும் பெரிய இறைச்சி தான் எளிதாக இருக்கும்.
வேகவைப்பதற்கு முன் |
தேவையான பொருட்கள்
சிப்பி/தோடு - 1 1/2 கிலோ
துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
சின்ன வெங்காயம் - 15
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 18 டீ ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவைக்கு
செய்முறை
ஒரு பாத்திரத்தில் சிப்பி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிக்கொள்ளவும். ஒரு சிப்பியின் மீது அடுத்த சிப்பியை வைத்து தேய்த்து அதன் ஓட்டிலிருக்கும் அழுக்குகள் நீங்கும் வரை தேய்த்து கழுவிக்கொள்ளவும். இவ்வாறே எல்லா சிப்பியையும் கழுவிக்கொள்ளவும்.
ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள சிப்பியை போட்டு மூடி வைத்து அடுப்பில் அதிக சூட்டில் வேகவைக்கவும். வேகவைக்கும் போது தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை.
சிப்பியிலிருக்கும் தண்ணீரிலேயே வெந்துவிடும். 8 முதல் 10 நிமிடங்களில் வெந்துவிடும். சிப்பி வெந்துவிட்டால் அதன் வாய் பிளந்து, இறச்சியானது அதன் ஓட்டிலிருந்து இளகி வந்திருக்கும். உடனே அடுப்பிலிருந்து இறக்கி தண்ணிரை வடிகட்டி ஆறவிடவும்.
கைபொறுக்கும் சூடு வந்தவுடன் ஒவ்வொரு சிப்பியாக எடுத்து இறச்சியை தனியாக பிரித்து எடுக்கவும். சில இறச்சி ஓட்டிலிருந்து தானாகவே கழன்று வந்துவிடும். சிலவை ஓட்டிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும். அவற்றை மற்றொரு சிப்பியின் ஓட்டை வைத்தே பிரித்தெடுக்கவும்.
பின்னர் அந்த இறச்சியின் உள்பகுதியில் பாசி போன்று ஒன்று இருக்கும். அதை கண்டிப்பாக அகற்றவேண்டும். பின்னர் இறச்சியின் முதுகு பகுதியில் பிய்த்து வெள்ளை நிறத்தில் நூல் போன்றிருப்பதை அகற்றவேண்டும். அதன் அருகில் கறுப்பு நிறத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்றவேண்டும். இப்படியே எல்லா சிப்பி இறச்சியிலும் அகற்றவேண்டும்.
பின்னர் தண்ணீரில் மூன்று முறை கழுவி எடுத்துக்கொள்ளவும். பின் அந்த சிப்பி இறச்சிகளை இரண்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். முழுதாக போடவிரும்புவர்கள் இரண்டு துண்டுகளாக வெட்டுவதை தவிர்க்கவும்.
சின்னவெங்காயத்தை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,சீரகம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும். கடுகு சேர்த்து பொரிந்தவுடன் சின்னவெங்காயத்தைச் சேர்த்துக்கிளறவும்.
சின்னவெங்காயம் வதங்கியவுடன் அதனுடன் சிப்பியை சேர்த்து சில நொடிகள் வதக்கியபின் அரைத்துவைத்துள்ள தேங்காய் கலவை, கறிவேப்பிலை,உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும். பின் மூடிவைத்து 2 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.
1 comment:
பார்ப்பதற்கு அருமையாக உள்ளது.
Post a Comment