ராகி/கேழ்வரகு புட்டு செய்வது மிகவும் எளிதானது. ராகியில் கால்சியம் சத்து நிறைந்துள்ளதால் அடிக்கடி ராகி/கேழ்வரகு உணவை நம் உணவுப் பட்டியலில் சேர்த்துக் கொள்ளவேண்டும். ராகி மாவு இப்பொழுது கடைகளில் ரெடிமேடாகவே கிடைக்கிறது. ரெடிமேடாக கிடைக்கும் மாவை பயன்படுத்த விரும்பாதோர் வீட்டிலேயே மாவு தயார் செய்து கொள்ளலாம்.
ராகி மாவு தயாரிக்கும் முறை
முழு ராகியை கடையிலிருந்து வாங்கி, அதில் இருக்கும் அழுக்குகள், சிறு சிறு கற்கள், போன்றவை போகும் வரை நன்றாக கழுவி எடுத்துக் கொள்ளவேண்டும். மொட்டைமாடியில் ஒரு காட்டன் துணியை விரித்து அதில் கழுவி வைத்துள்ள ராகியை பரப்பி வெயிலில் நன்றாக காய வைக்க வேண்டும். நன்றாக வெயில் இருந்தால் 4 முதல் 5 மணி நேரத்திற்குள் காய்ந்து விடும். காய்ந்த ராகியை மிக்சியில் அல்லது மாவு மில்லில் கொடுத்து பொடித்து மாவாக்கிக் கொள்ளவும்.
தேவையான பொருள்கள்
ராகிகேழ்வரகு மாவு - 1 1/2 கப்
தேங்காய் துருவல் - 1/2 கப்
உப்பு- தேவையான அளவு
செய்முறை
வாணலி்யை சூடாக்கி, எண்ணெய் எதுவும் சேர்க்காமல் ராகியை வறுத்துக் கொள்ளவும்.மிதமான தீயில் மணம் வரும் வரை (சுமார் 5 நிமிடங்கள்) வறுக்கவும்.
வறுத்த ராகியை ஒரு தட்டில் கொட்டி ஆறவிடவும். ஆறிய பின் ராகி மாவில் உப்பு சேர்த்து கலக்கவும்.
பின் ராகி மாவில் சிறிது சிறிதாக தண்ணீர் தெளித்து கட்டியில்லாமல் பிசையவும். மாவை உருண்டையாக பிடித்துவிட்டு, அந்த உருண்டையை உடைத்து உதிர்க்கும் போது திரும்பவும் மாவு பதத்திற்கு வந்துவிட்டால் புட்டு மாவு பதம் சரி என்று அர்த்தம்.
புட்டு குடத்தில் பாதி அளவு தண்ணீர் நிறைத்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்கவேண்டும்.
புட்டு குழாயில் முதலில் தேங்காயை பரப்பி பின் தயார் செய்து வைத்துள்ள புட்டு மாவு சேர்க்கவும். அதன் பின் தேங்காய் சேர்த்து பின் புட்டு மாவு சேர்க்கவும். இப்படியே புட்டு குழாய் நிறையும் வரை தேங்காய், புட்டு மாவு என்று மாறி மாறி சேர்க்கவும்.
பின் புட்டு குழாயை, புட்டு குடத்தில் பொருத்தி வைத்து வேகவிடவும். புட்டு வெந்தவுடன் புட்டு குழாயின் மேலிருந்து ஆவி வரும். ஆவி வந்த பின் 5 நிமிடங்கள் வேகவிட்டு பின் அடுப்பிலிருந்து இறக்கி, புட்டை ஒரு நீள கரண்டியின் பின் பக்கத்தின் உதவியுடன் வெளியே தள்ளவும்.
இப்போது சுட சுட ராகி புட்டு தயார். வேக வைத்த பச்சைப்பயிறு, நாட்டுச்சர்க்கரை, வாழைப்பழம் சேர்த்து புட்டை சுவைக்கலாம்.
மேலும் சில ராகி ரெசிபிகளை பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்.
ராகி இட்லி ரெசிபியை காண இங்கே க்ளிக் செய்யவும்.
2 comments:
Adipoli!
கேழ்வரகு புட்டு பார்ப்பதற்கு நன்றாக உள்ளது போல் சுவையிலும் அசத்தல்.
Post a Comment