Showing posts with label veg recipes. Show all posts
Showing posts with label veg recipes. Show all posts

Wednesday, October 11, 2023

பிரண்டைத் துவையல்/பிரண்டை சட்னி/Adamant Creeper Chutney (Devil's Back Bone/Veldt Grape Chutney)

பிரண்டை மருத்துவக் குணமுள்ள ஒரு கொடி வகையைச் சார்ந்தது. எலும்புகளைப் பலப்படுத்தும் சக்தி கொண்டது. உடைந்த எலும்புகளை எளிதில் ஒட்ட வைக்கும் தன்மை இதற்கு உண்டு. மூட்டு வலி உள்ளவர்கள் பிரண்டை மற்றும் முடக்கறுத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்து வர மூட்டுவலி குணமாகும். இவை கிராமங்களில் வேலிகளில் படர்ந்திருக்கும். வீட்டில் எளிதாக பிரண்டையை வளர்க்கலாம். தரையிலோ அல்லது தொட்டியிலோ வளர்க்கலாம். நன்றாக சூரிய ஒளி தேவை இதற்கு. அதனால் சூரிய ஒளி நன்றாக படும் இடத்தில் நட்டு வளர்க்கவேண்டும். ஒரு சிறிய துண்டு பிரண்டையை தொட்டியில் ஊன்றி வைத்தாலே எளிதில் வளர்ந்து விடும். இது கொடி வகை என்பதால் அது படர்வதற்கு ஏற்றவாறு அருகில் ஏதாவது செடி உயரமாக இருந்தால் அதைப் பற்றிக்கொண்டு வளரும். அருகில் மற்ற உயரமான செடி இல்லையென்றால் பிரண்டை படர்வதற்கு ஏற்றவாறு மரக்கம்புகளை ஊன்றிவைக்கலாம். நான் பிரண்டையை என் பால்கனியில் தொட்டியில் நட்டு வைத்திருக்கிறேன். சில மணி நேரமே அதுவும் ஆறு மாதங்களே சூரிய ஒளி என் பால்கனியில் வரும். அடுத்த ஆறு மாதங்களுக்கு சூரிய ஒளி அடுத்த திசையில் வரும். அங்கு தொட்டி வைக்கும் வசதியில்லை. சூரிய ஒளி அதிகம் கிடைக்காததால் நான் வளர்க்கும் பிரண்டையின் அளவு கடைகளில் வாங்கும் பிரண்டையை விட சிறியது. பிரண்டை பார்ப்பதற்கு குச்சி போன்றிருந்தாலும் அதன் நான்கு புறங்களிலும் அரும்புகள் இருக்கும். முற்றல் பிரண்டையை விட பிஞ்சு பிரண்டையே துவையலுக்கு உகந்தது. 



தேவையான பொருள்கள்

பிரண்டை - 1 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)

தேங்காய் துருவல்- 1/2 கப்

மிளகாய் வற்றல் -  3 (காரத்திற்கு ஏற்றவாறு)

பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை

புளி - 1 செ.மீ அளவு உருண்டை

இஞ்சி - சிறிய துண்டு

உளுந்து - 1 டேபிள்ஸ்பூன்

நல்லெண்ணெய் - 112 டேபிள்ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

செய்முறை

பிரண்டையை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும்.பின் அதன் ஒவ்வொரு கணுக்கிலும் வெட்டிக்கொள்ளவும். பிரண்டையின் நான்கு புறங்களிலும் அரும்புகள் இருக்கும். இந்த அரும்புகளை கத்தியின் உதவியுடன் நீக்கவும். மேலும் அதிலிருக்கும் நாரையும் நீக்கவும்.  கையில் நல்லெண்ணெய் தடவிக்கொண்டபிறகு தான் அதன் அரும்புகளையும் நாரையும் நீக்க வேண்டும். இல்லையென்றால் கையில் தாங்காத அரிப்பு ஏற்படும். நல்லெண்ணெய் பயன்படுத்தியும் கையில் அரிப்பு ஏற்பட்டால் சூடு பொறுக்கும் அளவில் உள்ள சுடு தண்ணீரில் கைகளை வைத்து எடுக்கலாம். நல்லெண்ணெய்க்குப் பதிலாக கையுறை இருந்தால் அதை போட்டுக்கொண்டால் சுத்தமாக அரிப்பு ஏற்படாது. அரும்புகளையும் நாரையும் நீக்கியபின் சிறு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். 

ஒரு கடாயை சூடாக்கி அதில் நல்லெண்ணெய் சேர்க்கவும். அதில் பிரண்டையை சேர்த்து வதக்கவும். பிரண்டையின் நிறம் மாறி அதன் அளவு முதலில் இருந்ததை விட நன்கு குறைந்து சுருங்கி வரும் வரை பொறுமையாக வதக்கவும். வதங்கிய பிரண்டை துண்டுகளை வேறு தட்டிற்கு மாற்றவும்.
 
அதே கடாயில் மீதமிருக்கும் எண்ணெயில் உளுந்து சேர்த்து வதக்கவும். உளுந்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
 
பின் இஞ்சி சேர்த்து வதக்கி பின் மிளகாய் வற்றலைச் சேர்த்து வதக்கவும். அதன்பின் புளி மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கிய பின் தேங்காய் சேர்த்து சுமார் 3 நிமிடங்கள்  வதக்கி பின் அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டிற்கு மாற்றி ஆற விடவும்.

ஆறிய பிரண்டை மற்றும் தேங்காய் கலவையை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான பிரண்டைச் சட்னி தயார். 

ஏற்கெனவே எண்ணெயில் வதக்கி இருப்பதால் கடுகு தாளிக்கத் தேவையில்லை. விருப்பம் உள்ளவர்கள் கடுகு தாளித்துக் கொள்ளலாம்.

Veldt Grape is a medicinal vine. It has the ability to heal the broken bones. People who suffer from joint pains should often include Veldt Grape and balloon vine plant in their diet to heal it. These are spread over fences in villages. Veldt Grape can be grown in the ground or in a pot at home. It needs good sunlight. So, the plant should be grown in a sunny place. Since it is a creeper, it will grow by clinging to any nearby plant that is tall enough to spread. If there is no other tall plant nearby, wooden poles can be propped up to support the it. I have Veldt Grape planted in a pot on my balcony. The size of the Veldt Grape that I grow is smaller than the store-bought ones because we don't get much sunlight. Young ones are better than the matured ones for the chutney.



Ingredients

Veldt Grape/Adamant creeper – 1 cup (chopped into small pieces)

Grated coconut- 1/2 cup

Chillies – 3 (adjust according to spiciness)

Asafoetida powder – a pinch

Tamarind - 1 cm size ball

Ginger - small piece

Urad Dhall - 1 tablespoon

Gingelly oil - 112 tbsp

Salt – as needed

Recipe

Wash the Veldt Grape/Adamant creeper thoroughly and cut on each node. Remove all four edges with the help of a knife. Also remove the fiber. Apply sesame oil on the hands beforehand otherwise, the hand will become unbearably itchy. If your hands get itchy even applying gingelly oil, wash your hands in warm water. Alternatively use gloves while removing fiber and the edges. After removing the fiber and the edges, cut into small pieces.

Heat a pan and add gingelly oil to it. Add Veldt Grape/Adamant creeper to it and saute. Saute patiently till the color of the Veldt Grape/Adamant creeper changes and its size shrinks well from its original size. Transfer the fried Veldt Grape/Adamant creeper pieces to another plate.

In the same pan add urad dhal and saute until golden brown.

Then add ginger and saute and then add chili powder and saute. Then add tamarind and Asafoetida powder and fry for few seconds then add coconut and fry for about 3 minutes then turn off the stove and transfer to a plate to cool.

Add the cooled Veldt Grape/Adamant creeper, coconut mixture, required amount of water and salt in a mixie jar. Grind to a fine paste and delicious Veldt Grape/Adamant creeper chutney is ready.

No need to season mustard as it is already fried in oil. Those who wish can season with mustard.


Wednesday, September 27, 2023

பருப்புக்குழம்பு/Lentils Gravy

பருப்புக்குழம்பு குமரி மாவட்டத்தின் தனித்துவமான குழம்பு. அங்குள்ள மக்கள் வாரத்தின் பெரும்பாலான நாட்களில் மீன் குழம்பே சாப்பிடுகிறார்கள். மீன் இல்லாத நாட்களில் பருப்புக்குழம்பு வைத்து சாப்பிடுகிறார்கள். அங்கு நடைபெறும் திருமணங்களில், திருமணவிருந்தின் போது சாதத்திற்கு முதன்முதலில் பரிமாறப்படுவது பருப்புக்குழம்பு. அதன்பிறகு தான் சாம்பார் பரிமாறுவார்கள். இந்த பருப்புக்குழம்புடன் சிறிது நெய் மற்றும் அப்பளம் சேர்த்து சாப்பிட சுவை அபாரமாக இருக்கும். எளிதாக விரைவில் செய்து முடிக்கக்கூடிய குழம்பு இது. சைவ சாப்பாடு சாப்பிடும் நாட்களில் இக்குழம்புடன் அவியல் அல்லது மீல்மேக்கர் உருளைக்கிழங்கு கூட்டுஅல்லது உருளைக்கிழங்கு வறுவல் போன்றவை அருமையாக இருக்கும். அசைவ சாப்பாடு சாப்பிடும் நாட்களில் கோழி மசாலா அல்லது மட்டன் மசாலா போன்றவை மிக அருமையாக இருக்கும்.



தேவையான பொருள்கள்

துவரம் பருப்பு - 1 கப்

பச்சை மிளகாய் -2

சின்ன வெங்காயம் - 4

கட்டி பெருங்காயம் - 1/2 செ.மீ துண்டு

தக்காளி சிறியது - 1

உப்பு - தேவையான அளவு

கறிவேப்பிலை - சிறிது

அரைக்க

தேங்காய் துருவல் - 1/2 கப்

சீரகம் - 1/2 டீஸ்பூன்

பூண்டு - 4 பற்கள்

மஞ்சள் பொடி - 1/4 டீஸ்பூன்

மிளகாய் வத்தல் பொடி - 1&1/2 டீஸ்பூன்

தாளிக்க

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு -1/4 டீஸ்பூன்

காய்ந்த மிளகாய் - 2

செய்முறை

துவரம் பருப்பை 3 முறை கழுவி ஒரு குக்கரில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பச்சை மிளகாய், பெருங்காயம்,சின்ன வெங்காயம், தக்காளி (4 துண்டுகளாக வெட்டி) சேர்க்கவும்.

பருப்பு வேகும் அளவுக்கு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி அடுப்பில் அதிக வெப்பத்தில் வைக்கவும். குக்கரில் ஆவி வந்தவுடன் வெயிட்டை போடவும். இப்போது தீயின் அளவை மிதமாக மாற்றவும். 

சுமார் 15 நிமிடங்கள் மிதமான தீயில் வேகவைத்து அடுப்பை அணைக்கவும். குக்கரின் பிரஷர் போகும் வரைக் காத்திருக்கவும். 

இந்த நேரத்தில் தேங்காய் துருவல், சீரகம், பூண்டு, மஞ்சள், மிளகாய் வற்றல் பொடி ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக (ஒரு சுற்று சுற்றினால் போதும்.) அரைத்துக்கொள்ளவும். 

குக்கரின் பிரஷர் அடங்கியவுடன் அதைத்திறந்து பருப்பைக் கடைந்து கொள்ளவும். பின் அரைத்து வைத்துள்ள தேங்காயை அதனுடன் கலந்து தேவையான அளவு தண்ணீர் சேர்க்கவும். (குழம்பு அதிக தண்ணியாகவும் இருக்கக்கூடாது அதேநேரத்தில் அதிகளவு கெட்டியாகவும் இருக்கக்கூடாது)

அத்துடன் உப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து கலக்கி அடுப்பில் அதிகமான தீயில் வைக்கவும். குழம்பு கொதித்து பொங்கி வரும் போது ஒரு கரண்டியை வைத்து கலக்கி விட்டு 2 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பை அணைத்து விடவும்.

ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து கடுகு தாளிக்கவும். கடுகு வெடித்ததும் காய்ந்த மிளகாய் வற்றலை கிள்ளி சேர்க்கவும். பின் கறிவேப்பிலை சேர்த்து அடுப்பை அணைக்கவும். இந்த தாளிப்பை குழம்புடன் சேர்க்கவும். சுவையான பருப்புக் குழம்பு தயார்.

குறிப்பு

இதே முறையில் பாசிப்பருப்பு பயன்படுத்தியும் குழம்பு செய்யலாம்.



Lentil gravy is the unique curry of Kumari district. People there used to have fish curry with rice most days of the week. On days when there is no fish available, they have rice with lentil curry. At weddings there, lentil curry is the first dish served during the wedding feast. Sambar will be served only after that. Add ghee and appalam to this gravy and it tastes amazing. This is an easy and quick gravy to make. Avial or Mealmaker potato curry or potato fry are great with this gravy on vegetarian days. Chicken masala or mutton masala are great with this on non-vegetarian days.

Ingredients

Toot Dal/Pigeon pea - 1 cup

Green chillies -2

Shallots - 4

Asafoetida - 1/2 cm piece

Tomatoes (small size) - 1

Salt – as needed

Curry leaves – a few

To Grind

Grated coconut - 1/2 cup

Cumin - 1/2 tsp

Garlic - 4 cloves

Turmeric powder – 1/4 tsp

Chilli powder – 1&1/2 tsp

To season

Coconut oil – 1 tablespoon

Mustard - 1/4 tsp

Dry Red Chillies – 2

Recipe

Wash toor dal/pigeon pea 3 times and take it in a pressure cooker. Add green chillies, asafoetida, shallots, tomatoes (cut into 4 pieces) to it.

Add enough water to cover the lentils and cover the cooker. Heat it on high heat. Once the steam comes out add the weight. Now turn the flame to medium.

Simmer on medium flame for about 15 minutes and switch off the stove. Wait for the pressure of the cooker to release.

At this time add grated coconut, cumin, garlic, turmeric and chilli powder in a mixer jar and grind it coarsely.

Once the pressure of the cooker is released, open it and mash the dal. Then mix the ground coconut with it and add required amount of water. (The gravy should not be too runny and also not too thick)

Also add salt and curry leaves and mix and keep it on high flame on the stove. When the gravy boils, mix it with a spoon and let it boil for 2 minutes and switch off the stove.

Add oil to a pan and add mustard. When the mustard seeds splutter, add dried chillies. Then add curry leaves and switch off the stove. Add this seasoning to the gravy. Delicious lentil gravy is ready.

Note

In the same way, you can also use yellow moong dal to make gravy.

Saturday, September 23, 2023

மீல் மேக்கர் உருளைக்கிழங்கு கூட்டு/Soya chunks & potato curry

மீல்மேக்கர் உருளைக்கிழங்கு கூட்டானது குமரி மாவட்டத்தில் கல்யாணவிருந்தில் பரிமாறப்படும் கூட்டுகளில் ஒன்று. இப்பொழுது கல்யாணவிருந்தில் பெரும்பாலும் பிரியாணி தான். ஆனால் 1980-1990 களில் கல்யாணவிருந்தில் சைவ உணவு தான். அதனால் சைவ இறச்சியாக இந்த மீல்மேக்கரை வைத்து கூட்டு செய்வார்கள். பருப்புக்குழம்பு, சாம்பார், ரசம், மோர் இவற்றோடு அவரவர் வசதியைப் பொறுத்து 5 வகை அல்லது 7 வகை அல்லது 9 வகை கூட்டு பரிமாறுவார்கள். அவற்றில் ஒன்று இந்த மீல்மேக்கர் உருளைக்கூட்டு. இதோடு பச்சைப்பட்டாணியை சேர்க்க விரும்புபவர்கள் பச்சைப்பட்டாணியை வேகவைத்து சேர்த்துக்கொள்ளலாம்.


தேவையான பொருள்கள்

மீல்மேக்கர் - 1/2 கப்

உருளைக்கிழங்கு - 1 பெரியது (சிறியதென்றால் 2)

வெங்காயம் - 1

உப்பு - தேவையான அளவு

இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

வறுத்தரைக்க

தேங்காய் துருவல் - 3/4 கப்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 & 1/2 டீஸ்பூன்

மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

நட்சத்திரபூ -1

பட்டை - 1 சிறிய துண்டு

கிராம்பு - 2 எண்ணம்

தாளிக்க

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

நட்சத்திரபூ -1

பட்டை - 1 சிறிய துண்டு

கிராம்பு - 2 எண்ணம்

செய்முறை

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் தேங்காய் துருவலைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும். பொன்னிறமாக மாறியதும் அதனுடன் சோம்பு, நட்சத்திரபூ, பட்டை,கிராம்பு சேர்த்து 1 நிமிடம் வறுத்து பின் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 1 நிமிடம் வறுத்துவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு தட்டிற்கு மாற்றவும். 

ஒரு பாத்திரத்தில் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். தண்ணீர் கொதித்தும் மீல்மேக்கரை சேர்த்து ஒரு கொதிவரும் வரை வைத்திருந்து பின் அடுப்பை அணைத்து பாத்திரத்தை மூடி 10 நிமிடங்கள் வைத்திருக்கவும். 10 நிமிடங்கள் கழித்துப் பார்க்கும் போது மீல்மேக்கர் நன்கு ஊறி இருக்கும். இப்போது தண்ணீரை வடித்து விட்டு சிறுது ஆறவிடவும். ஆறியபின் சிறிது மீல்மேக்கரை கையில் எடுத்து அதில் இருக்கும் தண்ணீரை பிழிந்து விடவும். இப்படியே எல்லா மீல்மேக்கரிலும் இருக்கும் தண்ணீரை பிழிந்துவிடவும்.

வெங்காயத்தை பொடியாக அரிந்து வைக்கவும். உருளைக்கிழங்கை நன்கு கழுவி, தோல் சீவி 2 செ.மீ அளவுள்ள துண்டுகளாக வெட்டி வைக்கவும்.

இப்போது வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு பட்டை,கிராம்பு,நட்சத்திரப்பூ சேர்க்கவும்.

பின்பு பொடியாக அரிந்த வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பின் வெட்டிவைத்த உருளைக்கிழங்கு மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். 1 நிமிடம் வதக்கி பின் உருளைக்கிழங்கு வேகத்தேவையான அளவு தண்ணீர் சேர்த்து மூடி வைத்து இளந்தீயில் வேகவைக்கவும். 

இதற்கிடையே வறுத்து ஆற வைத்திருந்த தேங்காய் மற்றும் இதர பொருள்களை மிக்சியில் சேர்த்து அதனுடன் மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

உருளைக்கிழங்கு வெந்தவுடன், அரைத்த தேங்காய் விழுது மற்றும்  சிறிதளவு தண்ணீர் சேர்த்து கலக்கவும். பின் தயார் செய்து வைத்திருக்கும் மீல்மேக்கரை அதனுடன் சேர்க்கவும். மீல்மேக்கர் மற்றும் தேங்காய் விழுதுக்கு ஏற்ற அளவு உப்பு சேர்க்கவும். ஏற்கெனவே உருளைக்கிழங்கிற்கு உப்பு சேர்த்திருப்பதால் குறைந்த அளவு உப்பு இப்பொழுது சேர்த்தால் போதும். கறிவேப்பிலையை சேர்த்துக் கிளறி கூட்டு நன்றாக கொதித்து சுண்டும் வரை வைத்திருந்து அடுப்பிலிருந்து இறக்கவும்.




குறிப்பு

இந்தக்கூட்டை குழம்பாக செய்து சப்பாத்தி,சாதத்திற்கு பரிமாறலாம். அதற்கு, தேங்காய் விழுது சேர்த்த பின், குழம்பிற்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து குழம்பு தயார் செய்யலாம்.

இந்தக்கூட்டுடன் பச்சைப்பட்டாணியும் சேர்த்துக் கொள்ளலாம். அதற்கு 1/4 கப் பச்சைப்பட்டாணியை 8 மணிநேரம் ஊறவைத்து, உப்பு சேர்த்து வேகவைத்து, உருளைக்கிழங்கு வெந்தபிறகு தேங்காய் விழுது சேர்த்தபின் பச்சைப்பட்டாணியும் சேர்த்து வேகவைக்கவும்.

Meal maker/Soya chunks potato curry is one of the curries served at wedding feasts in Kumari district. Biryani is mostly served at weddings, now a days. But in the 1980s and 1990s, only vegetarian food was served at weddings. So, they considered this meal maker/soya chunks as vegetarian meat. 5 or 7 or 9 types of curries along with dal, sambar, rasam, buttermilk are served at wedding feast. Soya chunks potato curry is one among them.

Ingredients

Meal maker/Soya chunks - 1/2 cup

Potato – 1 big (2 if small)

Onion - 1

Salt – as needed

Ginger garlic paste- 1 tbsp

Curry leaves – a little

Dry roast

Grated Coconut - 3/4 cup

Chili powder - 1 tbsp

Coriander powder– 2 & 1/2 tsp

Turmeric powder - 1/4 tsp

Fennel seeds - 1/4 tsp

Star Anise -1

Cinnamon stick - 1 small piece

Cloves - 2

To season

Coconut oil – 1 tablespoon

Star Anise -1

Cinnamon stick- 1 small piece

Cloves - 2

Recipe

Heat a pan on the stove and add grated coconut and fry until golden brown. When it turns golden brown, add fennel seeds, star anise, cinnamon, cloves and fry for 1 minute, then add coriander and chilli powder and fry for 1 minute, remove from the stove and transfer to another plate.

Boil 1 1/2 cups of water in a pot. Add soya chunks to the boiling water and bring to a boil, then turn off the stove and cover the pot for 10 minutes. After 10 minutes drain the water from soya chunks and let it cool a little. After it cools down take some soya chunks in your hand and squeeze the water out of it. Similarly squeeze all the water out of the soya chunks.

Chop the onion finely. Wash the potatoes well, remove the skin and cut into 2 cm cubes.

Now place a pan in the stove, add oil to it and add cinnamon, cloves and star anise.

Then add finely chopped onions and saute. Then add ginger and garlic paste and saute. Then add chopped potatoes, salt and stir. Saute for 1 minute and then add water as required for potatoes and cover and cook on low flame.

Meanwhile add the roasted coconut and other ingredients to the mixer and grind it along with turmeric powder and water.

Once the potatoes are cooked, add ground coconut paste, little water and mix. Then add the prepared soya chunks to it. Add salt to suit the soya chunks and coconut paste. Since the potatoes are already salted, adding a small amount of salt is enough now. Stir in the curry leaves and keep it until it is done and then remove from the stove.

Note

This curry can be made into gravy and served with chapati and rice. For that, after adding the coconut paste, add required amount of water to the gravy and boil it to prepare the gravy.

Green peas can also be added to this curry. For that, soak 1/4 cup of green peas for 8 hours, add salt and boil. Once potatoes are cooked, add coconut paste and boiled green peas too. 

Thursday, August 24, 2023

கோவைக்காய் சட்னி/கோவைக்காய் துவையல்/Ivygourd Chutney

கோவைக்காய், கொடியில் காய்க்கும் ஒரு காய் வகை. பார்ப்பதற்கு சிறிய வெள்ளரிக்காய் போன்று இருப்பதோடு மட்டுமல்லாமல் சமைக்காமல் பச்சை காயாக சாப்பிடும் போது வெள்ளரிக்காயின் சுவையிலேயே இருக்கும். கிராமங்களில் வேலிகளில் கோவைக்காய் கொடிகள் படர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கோவைக்காய் நன்கு முற்றுவதற்கு முன்பே கொடியிலிருந்து பறித்துவிடவேண்டும். முற்றிய காய்கள் சிறிது புளிப்பாக இருக்கும். கோவைக்காய் எளிதில் வளர்க்கக் கூடிய ஒரு கொடிவகை. கோவைக்காய் செடியிலிருந்து ஒரு கம்பு எடுத்து நட்டு வைத்தாலே வளர்ந்து விடும். எல்லா சீசனிலும் காய்க்கக் கூடிய ஒரு கொடி இது. கோவைக்காய் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற காய். அதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி கோவைக்காய் சட்னி,கோவைக்காய் பொரியல், கோவைக்காய் அவியல், கோவைக்காய் பிரட்டல் என்று வகை வகையாக செய்து சாப்பிடலாம்.



தேவையான பொருட்கள்

கோவைக்காய் - 20 எண்ணம்

உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

மிளகாய்வத்தல் - 2 முதல் 4 வரை (காரத்திற்கு ஏற்றவாறு)

பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை

தக்காளி -1

நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

செய்முறை

கோவைக்காயை கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயை சூடாக்கி அதில் நல்லெண்ணெய் சேர்க்கவும். அதில் உளுந்து சேர்த்து வதக்கவும். உளுந்து சிவக்கும் வரை வதக்கவும். உளுந்து சிவந்தபின் அதில் மிளகாய் வத்தல் சேர்க்கவும்.

பின் அதனுடன் கோவைக்காயை சேர்த்து அரைவேக்காடு வேகும் வரை வதக்கவும். அதாவது கோவைக்காயின் பச்சை நிறம் மாறும் வரை வதக்கவும். வதங்கியபின் அதில் இஞ்சி மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்பு பெருங்காயத்தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கவும். பின்பு அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.

ஆறியபின் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான கோவைக்காய் சட்னி தயார். பரிமாறும் போது கடுகு தாளித்துக் கொள்ளலாம். கடுகு தாளிக்காமலேயே சட்னி நன்றாக இருக்கும். 


Friday, August 18, 2023

புதினா துவையல் /புதினா சட்னி/Mint Chutney

புதினா சட்னி, இட்லி, தோசைக்கு ஏற்ற ஒரு சட்னி. சுடு சாதத்துடன் புதினா துவையல் சேர்த்து பிசைந்து சாப்பிடும் போது அதன் ருசி அபாரமாக இருக்கும்.

புதினா இலைகள் - 1 கப்

தேங்காய் - 1/2 கப்

உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை

புளி - ஒரு கொட்டை

நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

செய்முறை

புதினா இலைகளை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயை சூடாக்கி அதில் நல்லெண்ணெய் சேர்க்கவும். அதில் உளுந்து சேர்த்து வதக்கவும். உளுந்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

பின் அதனுடன் புதினா இலைகளை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். புதினா இலைகள் வதங்கியபின் அதில் இஞ்சி, புளி சேர்த்து வதக்கவும். 

பின்பு மிளகாய்த்தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கிய பின் பெருங்காயத்தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.பின் தேங்காய் சேர்த்து சுமார் 2-3 நிமிடங்கள்  வதக்கவும்.

பின்பு அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.

ஆறியபின் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான புதினா சட்னி தயார். தேவைப்பட்டால் கடுகு தாளித்துக் கொள்ளலாம்.



Friday, August 11, 2023

உருளைக்கிழங்கு வறுவல்/Potato fry

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கை வைத்து பலவகையான உணவு பதார்த்தங்களை தயார் செய்யலாம். அதில் மிக எளிதாக இந்த உருளைக்கிழங்கு வறுவல் செய்யலாம். இந்த வறுவல் தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுக்கு ஏற்ற ஒன்று.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 2

மஞ்சள் - 1/8 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/2டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

உருளைக்கிழங்கை கழுவி தோலை கத்தி வைத்து சுரண்டி நீக்கவும். தோல் முழுவதும் நீக்காமல் ஒன்றிரண்டு இடங்களில் ஒட்டிக் கொண்டிருந்தால் நல்லது. 

உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஓர் இரும்பு கடாயை ( தோசைக்கல் மாதிரி அகன்றதாக இருக்கவேண்டும். ) அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விடவும். 

எண்ணெய் சூடானதும் நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து கிளறவும். அதனுடன் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். 2 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறிவிடவும். அப்போது தான் கடாயில் ஒட்டாமல் இருக்கும். லேசான தீயிலேயே வைத்து வேகவைக்கவும்.

உருளைக்கிழங்கு முக்கால் பதம் வெந்ததும் அதில் மிளகாய்தூள் சேர்த்து கிளறவும். 2 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறி விடவும். உருளைக்கிழங்கு வெந்ததும் தீயை அதிகமாக வைத்து கைவிடாமல் கிளறவும். உருளைக்கிழங்கு துண்டுகள் பொரிந்து வரும்போது அடுப்பை அணைக்கவும். இரும்புக் கடாயிலிருந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி சூடாக பரிமாறவும்.



Sunday, July 30, 2023

காலிஃப்ளவர் பிரட்டல்/ Cauliflower stir fry

 தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் - 1 சிறியது

தக்காளி -1/2

வெங்காயம் - 1

மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

கறிமசால் தூள் - 1/8 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பலை - சிறிது

செய்முறை

காலிஃப்ளவரை சிறிதாக வெட்டி நீரில் கழுவி எடுத்து கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு (காலிஃப்ளவர் மூழ்கும் அளவுக்கு) தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் வெட்டிவைத்தள்ள காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து 3 லிருந்து 4 நிமிடங்கள் மூடி வைக்கவும். 4 நிமிடங்களுக்குப் பிறகு காலிஃப்ளவர் துண்டுகளை தண்ணீரை வடித்துவிட்டு எடுத்துவைக்கவும். வெங்காயம், தக்காளியை சிறியதாக வெட்டவும். ஒரு வாணலியை சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியபின் மிளகாய்த்தூள், கறிமசால் தூள், கறிவேப்பிலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியபின் காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து மசாலா நன்கு காலிஃப்ளவர் துண்டுகள் மீது படும்வரை பிரட்டவும். பின்பு அதை மூடி வைத்து காலிஃப்ளவர் வேகும்வரை வைத்திருந்து இறக்கி பரிமாறவும். 



Monday, July 3, 2023

மிளகு ரசம் எளிதான முறையில் - Pepper Rasam

அதிக வேலையில்லாமல் எளிதான முறையில் இந்த ரசத்தை செய்யலாம். சளித்தொல்லை இருக்கும் சமயத்தில் இந்த ரசம் வைத்து சோறு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

மிளகு - 15 எண்ணம்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 6 பற்கள்(சிறியது)
பெருங்காயப்பொடி - 1/8 டீஸ்பூன்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - சிறிது
உப்பு - தே.அளவு
கறிவேப்பலை - சிறிது
மல்லி தழை - சிறிது

செய்முறை

முதலில் புளியை 1/2 கப் நீரில் ஊற வைக்கவும். மிக்ஸி ஜாரில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து ஒரு சுற்று ஓடவிடவும். மிளகு மற்றும் சீரகம் ஒன்றிரண்டாக உடைந்திருக்கும். இதனுடன் பூண்டு, பெருங்காயப்பொடி, மஞ்சள் மற்றும் தக்காளி சேர்த்து அரைத்து எடுக்கவும். அடுப்பில் வாணலி வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும், பின்பு கடுகு சேர்த்து வெடித்ததும் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்க்கவும். அதனுடன் ஊறவைத்திருக்கும் புளியை கரைத்து வடிகட்டி சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு நீர், உப்பு, கறிவேப்பலை சேர்த்து மூடி வைக்கவும். கொதித்து பொங்கி வரும் போது மல்லி தழை சேர்த்து இறக்கவும். சுவையான மிளகு ரசம் தயார்.




Tuesday, September 22, 2009

எளிதான புரோகோலி பொரியல்


தேவையான பொருட்கள் :

புரோகோலி - 1

சின்ன வெங்காயம் - 10

மிளகாய்த் தூள் - 1டீ ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - சிறிது

செய்முறை :

புரோகோலி மற்றும் சின்ன வெங்காயத்தைச் சிறிதாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பின்பு சிறிதாக வெட்டிய புரோகோலியை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.


பின்னர் சிறிதாக வெட்டி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு கிளறவும். அதனுடன் உப்பு மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் லேசான தீயில் வேகவிடவும். சுவையான ப்ரொகொலி பொரியல் ரெடி.


Wednesday, October 15, 2008

இஞ்சி தீயல்


தேவையான பொருட்கள் :

இஞ்சி சிறிதாக நறுக்கியது - 1 கப்

தேங்காய் துருவல் - 1/2 கப்

மஞ்சள் - 1 டீ ஸ்பூன்

மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்

பூண்டு - 3 பல்

புளி - எலுமிச்சை அளவு

எண்ணெய் - தேவைக்கு

உப்பு - தேவைக்கு

கடுகு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :

புளியை 3/4 கப் நீரில் ஊற வைக்கவும். ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய இஞ்சி துண்டுகளைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கி தனியாக வைக்கவும். ஒரு வாணலியில் எண்ணெய் சேர்க்காமல் தேங்காய் துருவலை போட்டு பொன்னிறமாகும் வரை வறுக்கவும். வறுத்த தேங்காய், வறுத்த இஞ்சி, சீரகம், மஞ்சள், மிளகாய் தூள், மல்லித் தூள், பூண்டு சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பின்பு கறிவேப்பிலை சேர்க்கவும். அதனுடன் அரைத்து வைத்துள்ள கலவையைச் சேர்க்கவும். அதனுடன் புளிக் கரைசலைச் சேர்த்து உப்பையும் சேர்க்கவும். இந்த கலவை கொதிக்கும் வரை தீயை அதிகமாக வைக்கவும். கொதித்த பின்பு தீயைக் குறைத்து வைக்கவும். தீயல் நன்றாக வற்றி வரும் போது ( குழம்பு பதத்தில் இல்லாமல் சிறிது கெட்டியாயாக ) தீயை அணைத்து விடவும். இந்தத் தீயல் சாதத்துடன் சாப்பிட ஏற்ற ஒரு கூட்டு. இஞ்சியின் கசப்பு சுவை தெரிந்தால் சிறிது புளி கரைசல் சேர்த்துக் கொள்ளவும். 

Friday, August 22, 2008

மரவள்ளிக் கிழங்கு மசியல்

மரவள்ளிக் கிழங்கு நமது நாட்டில் விளையும் கிழங்குகளில் ஓன்று. இந்த மரவள்ளிக் கிழங்குகளிலே பல்வேறு வகை இருக்கின்றதாகக் கேள்விப்பட்டிருகிறேன். எனக்குத் தெரிந்த ஒரே மரவள்ளிக் கிழங்குவகை நூறு முட்டன் மட்டுமே. நூறு முட்டன் மரவள்ளிக் கிழங்கு எளிதாக வேகும் தன்மை கொண்டது. அதனால் தானோ என்னவோ எங்கள் ஊர் பக்கங்களில் நூறு முட்டன் மரவள்ளிக் கிழங்கு வகைகளையே பெரும்பான்மையோர் பயிருடுகின்றனர்.
மரவள்ளிக் கிழங்குக்கு தொட்டுக் கொள்ள மீன் குழம்பு தான் சரியான ஓன்று என்பது என் கருத்து . மரவள்ளிக் கிழங்கு + மீன் குழம்பு ருசியை அடிச்சிக்க முடியாது. ஒரு காலத்தில் எங்கள் ஊரில் உள்ள ஏழை மக்கள் அரிசி வாங்க முடியாத நிலையில் உள்ள மக்கள் வெறும் மரவள்ளிக் கிழங்கு + மீன் ( அந்த காலத்தில் மரவள்ளிக் கிழங்கு, மீன் மலிவாக இருந்திருக்கலாம் ) மட்டுமே சாப்பிட்டு வந்தார்கள் என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். மரவள்ளிக் கிழங்கு + மீன் இரண்டும் மிகுந்த சத்து நிறைந்ததாகவே கருதுகிறேன். " மீனும் கிழங்கும் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு. இதை ஒன்றும் செய்ய முடியாது " என்ற வீர வசனங்களையும் பெரியவர்கள் வாயிலிருந்து கேட்டிருக்கிறேன்.
இந்தக் கிழங்கை வேக வைத்து சாப்பிடும் பொது தொட்டுக் கொள்ள தேங்காய்த் துவையல், காய்ந்த மிளகாய் துவையல், மீன் குழம்பு போன்றவை ஏற்றதாக இருக்கும். மரவள்ளிக் கிழங்கு மசியல் செய்தால் தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமலே சாப்பிடலாம். இந்த மசியல் மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஓன்று. இனி செய்முறையைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
மரவள்ளிக் கிழங்கு - 1 ( சிறியது )
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபில்ஸ்பூன்
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 1
செய்முறை:
மரவள்ளிக் கிழங்கை தொலுரித்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை போட்டு அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பாதி வெந்த பிறகு உப்பு சேர்க்கவும். கிழங்கு நன்கு வெந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு தண்ணீரை வடிகட்டவும். தேங்காய்த் துருவலை கிழங்குடன் சேர்த்து ஒரு கரண்டியின் உதவியுடன் நன்கு மசிக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பின்பு அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். தாளித்த கலவையை மசித்து வைத்திருக்கும் கிழங்கில் சேர்க்கவும். எண்ணெய் சேர்க்க விரும்பாதோர் தாளிக்காமலே தேங்காய் சேர்த்து மசித்து வைத்திருக்கும் கிழங்கை சாப்பிடலாம். ருசியாகவே இருக்கும்.