Showing posts with label கடல் உணவுகள். Show all posts
Showing posts with label கடல் உணவுகள். Show all posts

Wednesday, January 10, 2024

மீன் தொக்கு/Fish curry without Tamarind

தேவையான பொருள்கள்

முள் இல்லாத மீன் துண்டுகள் -250 கிராம்

சின்ன வெங்காயம் - 10 எண்ணம்

தக்காளி - 1

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்

பூண்டு - 6 பல்

இஞ்சி - 1/2 இஞ்ச் துண்டு

நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு



செய்முறை

மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில், சுத்தம் செய்து வைத்துள்ள மீனுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். மீன் வெந்துவிட்டதா என்பதை அறிய ஒரு துண்டை வெட்டிப்பார்க்கவும். மீன் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும். 

வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை இடிகல்லில் சேர்த்து இடித்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். வெங்காயத்தைச் சேர்த்து ஒரிரு நிமிடங்கள் வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும். 

தக்காளி மசிந்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். இவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்க்கவும். ஏற்கெனவே மீனில் உப்பு சேர்த்திருப்பதால் சிறிதளவே உப்பு சேர்க்கவும். வேகவைத்த மீன்துண்டுகளை அதிலிருக்கும் தண்ணீரிலிருந்து வடிகட்டிக்கொள்ளவும். 

வடிகட்டிய தண்ணீரை, வதக்கிக்கொண்டிருக்கும் வெங்காயம் தக்காளி மசாலாவுடன் சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் வேகவைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் மூடி வைத்து வேகவைத்து, அடுப்பிலிருந்து இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.

Thursday, October 5, 2023

சாளை மீன் வறுவல் & குழம்பு /Sardines fry & Sardines Curry

சாளை,அயலை,நெத்திலி முதலிய சிறிய வகை மீன்களுக்கு இங்கு பதிவிட்டுள்ள படி குழம்பு செய்தால் ருசியாக இருக்கும். மற்ற பெரிய வகை மீன்களுக்கு ஏற்கெனவே இந்த வலைப்பதிவில் பதிவிட்டுள்ள படி குழம்பு செய்தால் நன்றாக இருக்கும். அந்தப் பதிவைப் பார்க்க இங்கே க்ளிக் செய்யவும். இரண்டு செய்முறைகளும் கிட்டதட்ட ஒரே மாதிரி இருந்தாலும் குழம்பு செய்யத் தேவைப்படும் பொருள்கள் சற்று வித்தியாசம். இந்த இரண்டு செய்முறைகளும் என் பாட்டியிடமிருந்து என் அம்மாவும், என் அம்மாவிடமிருந்து நானும் கற்றுக்கொண்டோம். சாளை மீன் இங்கு கிடைப்பது மிகவும் அரிது. அதனால் சாளை மீனை எப்போது ஈரச்சந்தையில் பார்த்தாலும் உடனே வாங்கி வந்து குழம்பும் வறுவலும் செய்துவிடுவேன்.

வறுவல் செய்யத் தேவையானப் பொருள்கள்

சாளை மீன்  - 1/2 கிலோ (சுமார் 15 எண்ணம்)

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்

புளி - 2 கொட்டை அளவு

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - பொரிக்கத்தேவையான அளவு



செய்முறை

சாளை மீனில் இருக்கும் செதில்களை கத்தி அல்லது அரிவாள்மனையின் உதவியுடன் அகற்றவும். பின் அதன் செவிளப்பகுதியோடு குடல்பகுதியையும் அகற்றவும். வால் பகுதியையும் நீக்கவும். தலை வேண்டாம் என்று நினைப்பவர்கள் அதையும் அகற்றவும். உடல் பகுதியில் ஒரு கீறல் போடவும். புளியை 1 டேபிள்ஸ்பூன் தண்ணீரில் ஊற வைக்கவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள்,உப்பு மூன்றையும் கலந்து அதனுடன் ஊறவைத்துள்ள புளியை நன்குப் பிசைந்து அந்தத்தண்ணீரைச் சேர்த்து ஒரு பேஸ்ட் செய்யவும். இந்தப் பேஸ்டை சுத்தம் செய்து தயாராக வைத்துள்ள மீன்களின் மீது தடவவும். ஒவ்வொரு மீனையும் தனித்தனியாக எடுத்து அதன் வயிற்றுப்பகுதி மற்றும் உடலில் கீறல் போட்ட பகுதி என்று எல்லா இடங்களிலும் மசாலா பேஸ்டை தடவவும்.மசாலா தடவியபின் சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் வரை ஊறவிடவும். 20 நிமிடங்களுக்குப் பிறகு ஒரு இரும்புக் கடாயை சூடாக்கி அதில் மீன் பொரிக்கத்தேவையான அளவு தேங்காய் எண்ணெய் சேர்க்கவும். எண்ணெய் சூடானதும் மசாலா தடவிய மீன்களைப் பொரித்து எடுக்கவும்.



சாளை மீன் குழம்பு செய்யத் தேவையானப்பொருள்கள்

சாளை மீன் - 1/2 கிலோ (சுமார் 15 எண்ணம்)

தேங்காய் - 3/4 கப்

சின்ன வெங்காயம் - 4

சீரகம் - 1/2 டீஸ்பூன்

மிளகு - 1/4 டீஸ்பூன்

தனியா தூள் - 112 டீஸ்பூன்

மிளகாய் தூள் - 114 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/4டீ ஸ்பூன்

புளி - நெல்லிக்காய் அளவு

உப்பு - தேவைக்கு

கடுகு - 1/2 டீஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

தேங்காய் எண்ணெய் - 1டேபிள்ஸ்பூன்

முருங்கைக்காய் - 1/2

செய்முறை :

புளியை 1/2 கப் நீரில் ஊற வைக்கவும். தேங்காயுடன் சின்ன வெங்காயம், சீரகம், மிளகு, தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்து வைத்திருக்கும் மீனுடன் அரைத்த கலவையை சேர்க்கவும். அதனுடன் ஊறவைத்துள்ள புளியை நன்குப் பிசைந்து அந்தத்தண்ணீர், மற்றும் குழம்புக்குத்தேவையான தண்ணீர் மற்றும் உப்பைச் சேர்த்து கலக்கி பின் அடுப்பில் வைக்கவும். முருங்கைக்காயைத் தோல் சீவி விரல் அளவு துண்டுகளாக வெட்டி சேர்க்கவும். குழம்பு கொதிக்கும் வரை அதிக தீயில் வைத்து கொதித்த பின்பு தீயை மிதமாக வைக்கவும். மீன் நன்றாக வெந்து குழம்பு வற்றி வரும் போது தீயை அணைத்து விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து குழம்பில் சேர்க்கவும். இப்போது சுவையான சாளை மீன் குழம்பு தயார்.


Small types of fish like sardines, anchovy etc. will be delicious if you make the gravy as posted here. For other type of fishes can use the other method that I have already posted on this blog. Click here to view that post. Although both the recipes are almost the same, the ingredients required to make the gravy are slightly different. Both of these recipes were learned from my grandmother by my mother and myself from my mother. Sardines is very rare to find here. So, whenever I see them in the wet market, I immediately buy it and make gravy and fry it.

Ingredients for Fry

Sardines – 1/2 kg (about 15 numbers)

Chili powder - 1 teaspoon

Turmeric powder – 1/4 teaspoon

Tamarind – 2 nut size

Salt – as needed

Coconut oil – required amount for frying

Recipe

Soak the tamarind in 1 tablespoon of water. Remove the scales from the fish with the help of a knife or a sickle. Then remove its intestines. Also remove the tail. If you don't want the head, remove it too. Make an incision in the body area. Wash it thoroughly. Mix turmeric powder, chilli powder and salt. Mash the soaked tamarind well and extract tamarind juice. Add tamarind juice to the chilli, turmeric mix to make a paste. Apply this paste on the cleaned and prepared fish. Take each fish separately and apply the masala paste all over its stomach and body. After 20 minutes heat an iron pan and add enough coconut oil to fry the fish. When the oil is hot, fry the fish and serve hot.

Ingredients for making Sardines fish curry

Sardines – 1/2 kg (about 15 numbers)

Coconut - 3/4 cup

Shallots - 4

Cumin - 1/2 teaspoon

Pepper - 1/4 teaspoon

Coriander powder – 1 & 1/2 teaspoon

Chili powder – 1 & 1/4 teaspoon

Turmeric powder – 1/4 teaspoon

Tamarind - the size of a gooseberry

Salt - as required

For Seasoning

Mustard - 1/2 teaspoon

Curry leaves – a little

Coconut oil – 1 tbsp

Drumstick - 1/2

Recipe:

Soak tamarind in 1/2 cup of water. Grind shallots, cumin, pepper, coriander powder, chili powder, turmeric powder with coconut. Add the ground mixture to the cleaned fish. Mash the soaked tamarind well and extract tamarind juice and add it. Add salt required for the gravy. Add required water for the gravy, mix and put it on the stove. Cut drumstick into finger size pieces and add it to the gravy. Bring to a boil over high heat until the gravy boils, then reduce heat to medium. Switch off the flame when the fish is cooked well. Heat oil in a pan and season with mustard and curry leaves and add to the gravy. Now the delicious Sardines fish gravy is ready to serve. Serve with hot rice.


Monday, September 18, 2023

கணவாய் கூட்டு/கணவாய் குழம்பு/Squid Curry/Squid Gravy

தேவையான பொருட்கள்

கணவாய் பெரியது - 1

சின்ன வெங்காயம் - 10 எண்ணம்

இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்

தேங்காய் துருவல் - 3/4 கப்

மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 டீஸ்பூன்

மல்லித்தூள் - 2 & 1/2 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

நட்சத்திரபூ -1

கிராம்பு - 2 எண்ணம்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது


செய்முறை

கணவாயை கழுவி சுத்தப்படுத்திக்கொள்ளவும். அதற்கு கணவாயின் தலையை அதன் உடம்பிலிருந்து பிரித்து எடுக்கவும். தலையுடன் அதன் குடல் சேர்ந்தே வெளிவரும்.  அதன் குடல் பகுதியில் கறுப்பு மை இருக்கும்.அதை நீக்கி விடவும். அந்த மையானது சிறிய பையில் இருக்கும். அந்த பை உடைந்து விடாமல் அதன் குடலிலிருந்து கவனமாக நீக்கி விடவும். பல நேரங்களில் அந்தப்பை உடைந்துவிடும். அப்படி உடைந்துவிட்டால் தண்ணீர் குழாயை திறந்து விட்டு  நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். அதன் தலைப்பகுதியில் கல் போன்ற ஒன்று இருக்கும். அதையும் நீக்கி விடவும். 

                                      Squid Cleaning Video

அதன் உடம்பு பகுதியில் கணவாய் நாக்கு இருக்கும். அது நமக்குத் தேவையில்லை. அதை நீக்கி விடவும். உடம்பு பகுதியில் நிறைய அழுக்குகள் இருக்கும். அவற்றை சுத்தப்படுத்த வேண்டும். உடம்பு பகுதியை இரண்டு அல்லது மூன்றாக வெட்டி சுத்தப்படுத்தவும். உடல் பகுதியையும் தலைப்பகுதியையும் நன்றாகக் கழுவிக்கொள்ளவும். பின்னர் 1 செ.மீ. அளவுள்ள துண்டுகளாக கணவாயை வெட்டிக்கொள்ளவும். 


ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் தேங்காய் துருவலைச் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். பொன்னிறமாக மாறியதும் அதனுடன் மல்லித்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து 1 நிமிடம் வறுத்துவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு தட்டிற்கு மாற்றி ஆற வைக்கவும். 

இப்போது வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு சோம்பு,கிராம்பு,நட்சத்திரப்பூ சேர்க்கவும்.

பின்பு பொடியாக வெட்டிய சின்ன வெங்காயம் சேர்த்து 3 நிமிடங்கள் வதக்கவும். பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பின் வெட்டிவைத்த கணவாய் மற்றும் உப்பு சேர்த்து கிளறி மூடி வைத்து இளந்தீயில் வேகவைக்கவும். தண்ணீர் விடத்தேவையில்லை. கணவாயிலிருக்கும் தண்ணீர் போதுமானது.

தண்ணீர் வற்றி வரும் போது கணவாய் முக்கால் பதம் வெந்திருக்கும். வறுத்து ஆற வைத்திருக்கும் தேங்காய் கலவையுடன் மஞ்சள் மற்றும் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். 

அரைத்த தேங்காயை வெந்துகொண்டிருக்கும் கணவாயுடன் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். ஏற்கெனவே கணவாய்க்கு உப்பு சேர்த்திருப்பதால் தேவைப்பட்டால் இப்பொழுது சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளவும். கணவாய் கூட்டாக வைக்கவேண்டுமென்றால் சிறிதளவே தண்ணீர் சேர்க்கவும். குழம்பாக வைக்கவேண்டுமென்றால் குழம்புக்குத் தேவையான அளவு தண்ணீர்,உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும்.

குழம்பு நன்கு கொதித்து, கணவாய் வேகும் வரை வைத்திருந்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு அடுப்பிலிருந்து இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.


Ingredients

Squid - 1 large

Shallots - 10 no.s

Ginger garlic paste- 1 tsp

Grated Coconut - 3/4 cup

Turmeric - 1/4 tsp

Chilli powder - 1 tsp

Coriander - 2 & 1/2 tsp

Star Anise - 1

Fennel seeds - 1/4 tsp

Cloves - 2 no.s

Salt – as needed

Coconut oil – 1 tablespoon

Curry leaves – a few

Recipe

Wash and clean the Squid. For that separate the head of the squid from its body. Along with the head comes out its guts. There will be black ink in its intestinal area. The ink will be in the ink sac. Carefully remove the ink sac without squeezing it. If you squeeze, it will break. If it breaks, open the water tap and wash it thoroughly. Remove a stone kind of thing from its head. 

Remove the pen from its body part(pen gives structural support to squid). There will be a lot of dirt in the body area. Clean them up. Cut the body part into two or three and clean it. Then cut squid into bite-sized pieces.

Heat a pan on the stove and add grated coconut to it and fry till it turns golden brown. When it turns golden brown, add coriander powder and chili powder and fry for 1 minute, remove from stove and transfer to another plate to cool.

Now place a pan on the stove, add oil to it and add fennel seeds, cloves and star anise.

Then add finely chopped onion and saute for 3 minutes. Then add ginger and garlic paste and saute. After that add chopped squid and salt, stir and cover and cook on low flame. No need to water. Squid will release sufficient water for it to cook.

Once the squid is three-quarters cooked. Grind the roasted coconut mixture with turmeric and water.

Add ground coconut paste to squid and add little water. Now add some salt if needed as the squid is already salted. 

Boil the gravy well, keep it until the squid is cooked, add curry leaves and then remove from the oven. Serve with hot rice.

Tuesday, August 29, 2023

சிப்பி/தோடு பொரியல்/Stir fried Mussels

Musselsஐ சிப்பி/தோடு என்றே கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அழைப்பார்கள். கடலோர மாவட்டம் என்பதால் பலவகையான மீன்கள் இங்கு கிடைக்கும். அதில் ஒரு வகை இந்த சிப்பி/தோடு. இந்த சிப்பி பெரும்பாலும் டிசம்பர் மாதங்களில் தான் கிடைக்கும். சிப்பியை சிங்கப்பூர் ஈரச்சந்தையில் பார்த்தவுடன் ஆவலுடன் வாங்கி பொரியல் செய்தாகிவிட்டது. கடலுணவு விரும்பிகளுக்கு சிப்பி பெரிய விருந்து என்றே சொல்லலாம். சிப்பி வாங்கும் போது பெரியதாகவும் கனமானதாகவும் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும். அப்போது தான் இதன் இறைச்சி பெரியதாக இருக்கும். பெரிய இறைச்சி தான் சாப்பிட நன்றாக இருக்கும். சுத்தம் செய்வதற்கும் பெரிய இறைச்சி தான் எளிதாக இருக்கும்.


வேகவைப்பதற்கு முன்


தேவையான பொருட்கள்

சிப்பி/தோடு - 1 1/2 கிலோ

துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 15

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 18 டீ ஸ்பூன்

சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கு


செய்முறை

ஒரு பாத்திரத்தில் சிப்பி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிக்கொள்ளவும். ஒரு சிப்பியின் மீது அடுத்த சிப்பியை வைத்து தேய்த்து அதன் ஓட்டிலிருக்கும் அழுக்குகள் நீங்கும் வரை தேய்த்து கழுவிக்கொள்ளவும். இவ்வாறே எல்லா சிப்பியையும் கழுவிக்கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள சிப்பியை போட்டு மூடி வைத்து அடுப்பில் அதிக சூட்டில் வேகவைக்கவும். வேகவைக்கும் போது தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை.

சிப்பியிலிருக்கும் தண்ணீரிலேயே வெந்துவிடும். 8 முதல் 10 நிமிடங்களில் வெந்துவிடும். சிப்பி வெந்துவிட்டால் அதன் வாய் பிளந்து, இறச்சியானது அதன் ஓட்டிலிருந்து இளகி வந்திருக்கும். உடனே அடுப்பிலிருந்து இறக்கி தண்ணிரை வடிகட்டி ஆறவிடவும். 

வேகவைத்த பின்


கைபொறுக்கும் சூடு வந்தவுடன் ஒவ்வொரு சிப்பியாக எடுத்து இறச்சியை தனியாக பிரித்து எடுக்கவும். சில இறச்சி ஓட்டிலிருந்து தானாகவே கழன்று வந்துவிடும். சிலவை ஓட்டிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும். அவற்றை மற்றொரு சிப்பியின் ஓட்டை வைத்தே பிரித்தெடுக்கவும். 

ஓட்டிலிருந்து எடுத்த பின்பு

பின்னர் அந்த இறச்சியின் உள்பகுதியில் பாசி போன்று ஒன்று இருக்கும். அதை கண்டிப்பாக அகற்றவேண்டும். பின்னர் இறச்சியின் முதுகு பகுதியில் பிய்த்து வெள்ளை நிறத்தில் நூல் போன்றிருப்பதை அகற்றவேண்டும். அதன் அருகில் கறுப்பு நிறத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்றவேண்டும். இப்படியே எல்லா சிப்பி இறச்சியிலும் அகற்றவேண்டும். 


முதுகிலிருந்து நூல் மற்றும் அழுக்குகளை அகற்றியபின்


பின்னர் தண்ணீரில் மூன்று முறை கழுவி எடுத்துக்கொள்ளவும். பின் அந்த சிப்பி இறச்சிகளை இரண்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். முழுதாக போடவிரும்புவர்கள் இரண்டு துண்டுகளாக வெட்டுவதை தவிர்க்கவும்.

சின்னவெங்காயத்தை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,சீரகம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். 

வாணலியை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும். கடுகு சேர்த்து பொரிந்தவுடன் சின்னவெங்காயத்தைச் சேர்த்துக்கிளறவும்.

சின்னவெங்காயம் வதங்கியவுடன் அதனுடன் சிப்பியை சேர்த்து சில நொடிகள் வதக்கியபின் அரைத்துவைத்துள்ள தேங்காய் கலவை, கறிவேப்பிலை,உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும். பின் மூடிவைத்து 2 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.




Sunday, July 23, 2023

இறால் கறி / Prawn Curry

தேவையான பொருட்கள்

இறால் -1 கிலோ

சின்ன வெங்காயம் - 20 எண்ணம்

தக்காளி - 2

பச்சை மிளகாய் -2

குடை மிளகாய் துண்டுகள் - 1/2 கப்

இஞ்சி பூண்டு விழுது- 1 டீஸ்பூன்

மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் -1/2 டீஸ்பூன்

மல்லித்தூள் - 1 டேபிள்ஸ்பூன்

மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்

பட்டைத்தூள் - 1/8 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

உப்பு - தே.அளவு

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

மல்லி தழை - சிறிது

செய்முறை

இறாலைக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.  ஒரு கடாயை சூடாக்கி அதில் எண்ணைய் விட்டு சூடானதும் சோம்பு சேர்த்து பொரிந்தவுடன், பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கி மசிந்த பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.பின்பு அதனுடன் மிளகாய்த் தூள், மல்லித்தூள்,மிளகுத்தூள்,பட்டைத்தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கிய பின் வெட்டிய குடைமிளகாய்த் துண்டுகளைச் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். இப்போது சுத்தம் செய்து வைத்திருக்கும் இறால் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து, மசாலா இறாலின் மீது படும் வரை நன்கு பிரட்டவும். பின்பு கடாயை மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும். கடாயைத் திறந்து கறிவேப்பிலை மற்றும் மல்லி இலை சேர்த்து 5 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.


Wednesday, February 4, 2009

நண்டு மசாலா


தேவையான பொருட்கள் :

நண்டு - 2 பெரியது

தேங்காய் (துருவியது) - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 15

மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/8 டீ ஸ்பூன்

சீரகம் - 1/ டீ ஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கு

கடுகு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கு


செய்முறை:

நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் சிறிது வதங்கிய பின் நண்டைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்பு வாணலியை மூடி வைத்து தீயை மெலிதாக வைக்கவும். இடைஇடையே கிளறி விடவும். 15 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். நண்டில் இருக்கும் தண்ணீர் வற்றி வரண்டு வரும்போது தீயை அணைத்து விடவும். சாதத்துடன் பரிமாற நண்டு மசாலா தயார்.

Tuesday, September 23, 2008

சுறா மீன் புட்டு :


சுறா மீன் புட்டு முதல் முறையாக செய்தேன். இல்லத்தரசி அவர்களின் செய்முறையைப் பார்த்து செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. இல்லத்தரசியின் செய்முறை இங்கே.

தேவையான பொருட்கள் :

சுறா மீன் துண்டு - 300 கிராம்

வெங்காயம் ( பொடியாக நறுக்கியது ) - 3 அல்லது 4

பூண்டு ( பொடியாக நறுக்கியது ) - 6 பல்

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிது

மல்லித் தழை - சிறிது

முழு உளுந்து - 1 டீ ஸ்பூன்

கடுகு - 1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிது

சீரகம் - 1/2 டீ ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

சுறா மீன் துண்டுகளை சூடான நீரில் போட்டு 10-15 நிமிடங்கள் வேக வைக்கவும். அதனுடன் மஞ்சள் சேர்க்கவும். மீன் துண்டுகள் வெள்ளை நிறத்தில் மாறிவிட்டால் அது வெந்து விட்டது என்று அர்த்தம். மீன் துண்டுகளை தனியாக எடுத்து பரலாக/ உதிரியாக உதிர்த்து வைக்கவும்.


கடாயை சூடாக்கவும். அதில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பின்பு முழு உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும். அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதனுடன் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். உதிர்த்து வைத்துள்ள சுறா மீனை அத்துடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும். உப்பு சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். நறுக்கி வைத்துள்ள மல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.

Thursday, July 17, 2008

சென்னா கூனி (Baby Shrimp) பொரியல் :-

சென்னா கூனியை விரும்பாத ஆட்கள் கிடையாது. சில காலங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த சென்னா கூனி சிறிய இறால் வகையைச் சார்ந்தது. சென்னா கூனியை முருங்கை இலையுடன் சேர்த்து சமைப்பது தான் எங்கள் ஊர் வழக்கம். முருங்கை இலை இரும்புச்சத்துக்கு பெயர் போனது. முருங்கை இலை பொரியல் சிறிது கடுப்பு தன்மை கொண்டதால் சிலர் அதை விரும்பமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சென்னா கூனியும் முருங்கை இலையும் சேர்த்து பொரியல் செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். முருங்கை இலையின் கடுப்பும் தெரியாது அதே சமயத்தில் இது மிகுந்த சத்தானதும் கூட.


தேவையான பொருட்கள் :

சென்னா கூனி - 250 கிராம்

முருங்கை இலை(உருவியது) - 1 1/2 கப்

தேங்காய் (துருவியது) - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 15

மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/8 டீ ஸ்பூன்

சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கு

செய்முறை:

சென்னா கூனியை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பரலாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் சிறிது வதங்கிய பின் சென்னா கூனி மற்றும் முருங்கை இலையைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்பு வாணலியை மூடி வைத்து தீயை மெலிதாக வைக்கவும். இடைஇடையே கிளறி விடவும். 15 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். கூனி வறண்டு நல்ல மணம் கொடுக்கும். அப்பொழுது தீயை அணைத்து விடவும். சாதத்துடன் பரிமாற கூனி தயார். மீன்

Friday, July 11, 2008

மீன் குழம்பு (Fish Curry) :-


கடற்கரை மாவட்டம் என்பதாலோ என்னவோ கன்னியாகுமரி மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு மீன். கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்யப்படும் உணவுகளில் தேங்காய் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான சமையல் செய்யப்படுகிறது. அதைப் போன்றே தமிழ் நாட்டிலும் ஒவ்வொரு மாவாட்டத்திலும் வித்தியாசமான சமையல் செய்யப்படுகிறது. இந்த மீன் குழம்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்யப்படும் சமையல் வகையாகும். இனி இந்த மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
மீன் - 500gms
தேங்காய் - 3/4 கப்
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 5 பல்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
தனியா தூள் - 4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
மீனைக் கழுவி சுத்தம் செய்து அதைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். புளியை 1/2 கப் நீரில் ஊற வைக்கவும். தேங்காயுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு, வெந்தயம், ஓமம், தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைத்திருக்கும் மீனுடன் அரைத்த கலவையை சேர்க்கவும். அதனுடன் ஊற வைத்திருக்கும் புளியைக் கரைத்து வடிகட்டிய நீர், 1 1/2 கப் நீர் மற்றும் உப்பைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதிக்கும் வரை தீயை நன்கு வைத்து கொதித்த பின்பு தீயை குறைத்து வைக்கவும். குறைந்தது 20 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். குழம்பு வற்றி வரும் போது தீயை அணைத்து விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து குழம்பில் சேர்க்கவும். மீன் குழம்பு தயார்.