கேரளாவில் பிரசித்தி பெற்ற பாயாசம் அடை பாயாசம். அடை பாயாசம் அங்கு அடை பிரதமன் என்று அழைக்கப்படுகிறது. கேரளாவில் பெரும்பாலும் அரிசி அடை வைத்தே அடை பிரதமன் செய்கிறார்கள். தமிழ்நாட்டில் பெரும்பாலும் மைதா அடை வைத்து அடை பாயாசம் செய்யப்படுகிறது. மைதா அடை பாயாசத்திற்கும் அரிசி அடை பாயாசத்திற்கும் செய்முறையில் சிறிது வித்தியாசம் உண்டு. அதேப்போன்று சுவையிலும் சிறிது வித்தியாசம் இருக்கும்.
தேவையான பொருட்கள்
மைதா அடை - 1/2 கப்
ஜவ்வரிசி - 1/4 கப்
கெட்டி தேங்காய் பால் - 1 கப்
தண்ணீர் - 3 1/2 கப்
பொடித்த வெல்லம் - 1 கப்
நெய் - 3 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் - 4
முந்திரிபருப்பு - 2 டேபிள்ஸ்பூன்
உலர்ந்த திராட்சை - 2 டேபிள்ஸ்பூன்
தேங்காய் துண்டுகள்(சிறிதாக நறுக்கியது) - 2 டேபிள்ஸ்பூன்
செய்முறை
உடைத்த அடை |
அடையை 1/2 செமீ அளவுக்கு சிறிது சிறிதாக உடைத்துக்கொள்ளவும்.ஒரு கடாயை சூடாக்கி, அடையை வறுத்துக் கொள்ளவும். எண்ணெய் எதுவும் விடாமல் வறுக்கவேண்டும். அடையின் வெள்ளை நிறம் மாறி இளம் பொன்னிறமாக மாறும் வரை வறுக்கவும். அப்போது தான் பாயாசம் செய்யும் போது ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும்.வறுத்த அடையை ஒரு தட்டிற்கு மாற்றவும்.
வறுத்த பின்பு |
இப்போது அதே கடாயில் நெய் சேர்த்து முந்திரி பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து வேறு தட்டிற்கு மாற்றவும். பின் அதே கடாயில் உலர்ந்த திராட்சை சேர்த்து வறுத்து வேறு தட்டிற்கு மாற்றவும். பின்னர் அதே கடாயில் தேங்காய் துண்டுகள்(சிறிதாக நறுக்கியது) சேர்த்து பொன்னிறமாக வறுத்து வேறு தட்டிற்கு மாற்றவும்.
ஒரு அடிகனமான வாயகன்ற பாத்திரத்தில் மேற்கூறிய அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். கொதிவந்தவுடன் அதில் ஜவ்வரிசியை சேர்க்கவும். சேர்த்தவுடன் ஒரு கரண்டியை வைத்து கலக்கவும். இப்படி செய்வதால் ஜவ்வரிசி பாத்திரத்தில் ஒட்டாது.
பின்பு பாத்திரத்தை மூடி வைத்து ஜவ்வரிசியை வேகவைக்கவும். இடையிடையே ஒரு கரண்டியை வைத்து கிளறி விடவும். இல்லையென்றால் பாத்திரத்தின் அடியில் ஜவ்வரிசி ஒட்டிக்கொள்ளும்.
ஜவ்வரிசி பாதி வெந்தவுடன் அடையை சேர்த்துக் கிளறவும்.பாத்திரத்தை மூடாமல் அடையை வேகவைக்கவும். மூடி வைத்தால் பொங்கி வழியும். எனவே மூடுவதை தவிர்க்கவும்.
இடையிடையே ஒரு கரண்டியை வைத்து கிளறி விடவும். அடை நன்கு வேகும் வரை வேகவைக்கவும். அடை வெந்துவிட்டதா என்பதை அறிய ஒரு சிறிய துண்டை எடுத்து சாப்பிட்டு பார்க்கவும். அடை வெந்து வரும் போது ஜவ்வரிசியும் கண்ணாடி போன்று வெந்துவிடும்.
இப்போது ஏலக்காயை இடிகல்லில் வைத்து தட்டி சேர்க்கவும். பின்பு வெல்லத்துடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி சேர்க்கவும். சுத்தமான வெல்லமாக இருந்தால் வடிகட்டதேவையில்லை.
வெல்லம் சேர்த்தபின் கரண்டி வைத்து நன்கு கலக்கவும். பின்னர் தேங்காய்ப்பால் சேர்த்து கலக்கவும்.
தேங்காய்ப்பால் சேர்த்து ஒரு கொதி வந்தவுடன் வறுத்து வைத்திருக்கும் முந்திரிபருப்பு,உலர்ந்த திராட்சை,தேங்காய்த்துண்டுகள் சேர்த்து கிளறி அடுப்பிலிருந்து இறக்கிவிடவும். வெகு நேரம் கொதித்தால் தேங்காய்ப்பால் திரிந்துவிடும். இப்போது சுவையான அடை பாயாசம் தாயார்.
இந்த பாயாசத்துடன் வாழைப்பழம் மற்றும் அப்பளம்/பப்படம் சேர்த்து சுவைத்தால் மிக அருமையாக இருக்கும்.
குறிப்பு
2 comments:
அருமை. அருமை.
செய்முறை விளக்கம் தெளிவாக உள்ளது.செய்வதுஎளிதாக இருந்தது.ருசி நன்றாக இருந்தது. திரும்ப திரும்ப செய்ய ஆசையாய் உள்ளது.
Post a Comment