Tuesday, August 29, 2023

சிப்பி/தோடு பொரியல்/Stir fried Mussels

Musselsஐ சிப்பி/தோடு என்றே கன்னியாகுமரி மாவட்ட மக்கள் அழைப்பார்கள். கடலோர மாவட்டம் என்பதால் பலவகையான மீன்கள் இங்கு கிடைக்கும். அதில் ஒரு வகை இந்த சிப்பி/தோடு. இந்த சிப்பி பெரும்பாலும் டிசம்பர் மாதங்களில் தான் கிடைக்கும். சிப்பியை சிங்கப்பூர் ஈரச்சந்தையில் பார்த்தவுடன் ஆவலுடன் வாங்கி பொரியல் செய்தாகிவிட்டது. கடலுணவு விரும்பிகளுக்கு சிப்பி பெரிய விருந்து என்றே சொல்லலாம். சிப்பி வாங்கும் போது பெரியதாகவும் கனமானதாகவும் இருக்கிறதா என்று பார்த்து வாங்கவேண்டும். அப்போது தான் இதன் இறைச்சி பெரியதாக இருக்கும். பெரிய இறைச்சி தான் சாப்பிட நன்றாக இருக்கும். சுத்தம் செய்வதற்கும் பெரிய இறைச்சி தான் எளிதாக இருக்கும்.


வேகவைப்பதற்கு முன்


தேவையான பொருட்கள்

சிப்பி/தோடு - 1 1/2 கிலோ

துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 15

மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்

மஞ்சள் தூள் - 18 டீ ஸ்பூன்

சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கு


செய்முறை

ஒரு பாத்திரத்தில் சிப்பி மூழ்கும் அளவுக்கு தண்ணீர் ஊற்றி நன்றாக கழுவிக்கொள்ளவும். ஒரு சிப்பியின் மீது அடுத்த சிப்பியை வைத்து தேய்த்து அதன் ஓட்டிலிருக்கும் அழுக்குகள் நீங்கும் வரை தேய்த்து கழுவிக்கொள்ளவும். இவ்வாறே எல்லா சிப்பியையும் கழுவிக்கொள்ளவும்.

ஒரு வாயகன்ற பாத்திரத்தில் கழுவி வைத்துள்ள சிப்பியை போட்டு மூடி வைத்து அடுப்பில் அதிக சூட்டில் வேகவைக்கவும். வேகவைக்கும் போது தண்ணீர் எதுவும் சேர்க்கத் தேவையில்லை.

சிப்பியிலிருக்கும் தண்ணீரிலேயே வெந்துவிடும். 8 முதல் 10 நிமிடங்களில் வெந்துவிடும். சிப்பி வெந்துவிட்டால் அதன் வாய் பிளந்து, இறச்சியானது அதன் ஓட்டிலிருந்து இளகி வந்திருக்கும். உடனே அடுப்பிலிருந்து இறக்கி தண்ணிரை வடிகட்டி ஆறவிடவும். 

வேகவைத்த பின்


கைபொறுக்கும் சூடு வந்தவுடன் ஒவ்வொரு சிப்பியாக எடுத்து இறச்சியை தனியாக பிரித்து எடுக்கவும். சில இறச்சி ஓட்டிலிருந்து தானாகவே கழன்று வந்துவிடும். சிலவை ஓட்டிலேயே ஒட்டிக்கொண்டிருக்கும். அவற்றை மற்றொரு சிப்பியின் ஓட்டை வைத்தே பிரித்தெடுக்கவும். 

ஓட்டிலிருந்து எடுத்த பின்பு

பின்னர் அந்த இறச்சியின் உள்பகுதியில் பாசி போன்று ஒன்று இருக்கும். அதை கண்டிப்பாக அகற்றவேண்டும். பின்னர் இறச்சியின் முதுகு பகுதியில் பிய்த்து வெள்ளை நிறத்தில் நூல் போன்றிருப்பதை அகற்றவேண்டும். அதன் அருகில் கறுப்பு நிறத்தில் இருக்கும் அழுக்குகளை அகற்றவேண்டும். இப்படியே எல்லா சிப்பி இறச்சியிலும் அகற்றவேண்டும். 


முதுகிலிருந்து நூல் மற்றும் அழுக்குகளை அகற்றியபின்


பின்னர் தண்ணீரில் மூன்று முறை கழுவி எடுத்துக்கொள்ளவும். பின் அந்த சிப்பி இறச்சிகளை இரண்டு துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும். முழுதாக போடவிரும்புவர்கள் இரண்டு துண்டுகளாக வெட்டுவதை தவிர்க்கவும்.

சின்னவெங்காயத்தை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள்,சீரகம் சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். 

வாணலியை சூடாக்கி எண்ணெய் சேர்க்கவும். கடுகு சேர்த்து பொரிந்தவுடன் சின்னவெங்காயத்தைச் சேர்த்துக்கிளறவும்.

சின்னவெங்காயம் வதங்கியவுடன் அதனுடன் சிப்பியை சேர்த்து சில நொடிகள் வதக்கியபின் அரைத்துவைத்துள்ள தேங்காய் கலவை, கறிவேப்பிலை,உப்பு சேர்த்து நன்கு கலந்துவிடவும். பின் மூடிவைத்து 2 நிமிடங்கள் வேகவிட்டு இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.




Thursday, August 24, 2023

கோவைக்காய் சட்னி/கோவைக்காய் துவையல்/Ivygourd Chutney

கோவைக்காய், கொடியில் காய்க்கும் ஒரு காய் வகை. பார்ப்பதற்கு சிறிய வெள்ளரிக்காய் போன்று இருப்பதோடு மட்டுமல்லாமல் சமைக்காமல் பச்சை காயாக சாப்பிடும் போது வெள்ளரிக்காயின் சுவையிலேயே இருக்கும். கிராமங்களில் வேலிகளில் கோவைக்காய் கொடிகள் படர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கோவைக்காய் நன்கு முற்றுவதற்கு முன்பே கொடியிலிருந்து பறித்துவிடவேண்டும். முற்றிய காய்கள் சிறிது புளிப்பாக இருக்கும். கோவைக்காய் எளிதில் வளர்க்கக் கூடிய ஒரு கொடிவகை. கோவைக்காய் செடியிலிருந்து ஒரு கம்பு எடுத்து நட்டு வைத்தாலே வளர்ந்து விடும். எல்லா சீசனிலும் காய்க்கக் கூடிய ஒரு கொடி இது. கோவைக்காய் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற காய். அதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி கோவைக்காய் சட்னி,கோவைக்காய் பொரியல், கோவைக்காய் அவியல், கோவைக்காய் பிரட்டல் என்று வகை வகையாக செய்து சாப்பிடலாம்.



தேவையான பொருட்கள்

கோவைக்காய் - 20 எண்ணம்

உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

மிளகாய்வத்தல் - 2 முதல் 4 வரை (காரத்திற்கு ஏற்றவாறு)

பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை

தக்காளி -1

நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

செய்முறை

கோவைக்காயை கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயை சூடாக்கி அதில் நல்லெண்ணெய் சேர்க்கவும். அதில் உளுந்து சேர்த்து வதக்கவும். உளுந்து சிவக்கும் வரை வதக்கவும். உளுந்து சிவந்தபின் அதில் மிளகாய் வத்தல் சேர்க்கவும்.

பின் அதனுடன் கோவைக்காயை சேர்த்து அரைவேக்காடு வேகும் வரை வதக்கவும். அதாவது கோவைக்காயின் பச்சை நிறம் மாறும் வரை வதக்கவும். வதங்கியபின் அதில் இஞ்சி மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்பு பெருங்காயத்தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கவும். பின்பு அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.

ஆறியபின் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான கோவைக்காய் சட்னி தயார். பரிமாறும் போது கடுகு தாளித்துக் கொள்ளலாம். கடுகு தாளிக்காமலேயே சட்னி நன்றாக இருக்கும். 


Wednesday, August 23, 2023

சுக்கு மல்லி காபி/Dried Ginger and Coriander Coffee

சளித்தொல்லை, தொண்டைவலி, இருமல் இருக்கும்பொழுது இந்த சுக்கு மல்லி காபி தொண்டைக்கு இதமாகவும் அதே நேரத்தில் ஒரு நிவாரணியாகவும் திகழ்கிறது. துளசி இலைகள் சேர்ப்பதால் இருமலை குறைக்கும் ஒரு வீட்டு மருந்தாகவும் இருக்கும். 

தேவையான பொருட்கள்

சுக்கு துண்டு - 1 இஞ்ச் அளவு

முழுமல்லி - 1/2 டீஸ்பூன்

முழுமிளகு - 1/4 டீஸ்பூன்

முழுசீரகம் - 1/4 டீஸ்பூன்

துளசி இலை - 10 எண்ணம்

கருப்புக்கட்டி - ஒரு எலுமிச்சம்பழ அளவு

தண்ணீர் - 2 கப்

செய்முறை

சுக்கு,மல்லி,மிளகு,சீரகம் போன்றவற்றை தனித்தனியே இடிகல்லில் போட்டு கொரகொரப்பாக இடித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்து அதை சூடாக்கவும். பின் அதில் கருப்புக்கட்டி சேர்க்கவும். 

ஒரு கொதிவந்ததும் அதில் இடித்துவைத்துள்ள சுக்கு,மல்லி,மிளகு,சீரகத்தை சேர்க்கவும். பின் அதனுடன் துளசி இலைகளை சேர்த்து ஒரு கரண்டி வைத்து கலக்கவும். கரண்டி வைத்து கலக்கும் போது கருப்புக்கட்டி கரையாமல் இருந்தால் கூட கரைந்துவிடும்.

3 முதல் 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். 3 நிமிடங்கள் கழித்து சுக்கு மல்லி காபி குடிப்பதற்கு தயாராக இருக்கும். 3 நிமிடங்கள் காத்திருப்பதால் கருப்புக்கட்டியில் உள்ள சிறு அழுக்குகள் அடியில் தங்கிவிடும்.சல்லடை வைத்து அரித்து குடிக்கவும்.



Friday, August 18, 2023

புதினா துவையல் /புதினா சட்னி/Mint Chutney

புதினா சட்னி, இட்லி, தோசைக்கு ஏற்ற ஒரு சட்னி. சுடு சாதத்துடன் புதினா துவையல் சேர்த்து பிசைந்து சாப்பிடும் போது அதன் ருசி அபாரமாக இருக்கும்.

புதினா இலைகள் - 1 கப்

தேங்காய் - 1/2 கப்

உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை

புளி - ஒரு கொட்டை

நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

செய்முறை

புதினா இலைகளை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயை சூடாக்கி அதில் நல்லெண்ணெய் சேர்க்கவும். அதில் உளுந்து சேர்த்து வதக்கவும். உளுந்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

பின் அதனுடன் புதினா இலைகளை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். புதினா இலைகள் வதங்கியபின் அதில் இஞ்சி, புளி சேர்த்து வதக்கவும். 

பின்பு மிளகாய்த்தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கிய பின் பெருங்காயத்தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.பின் தேங்காய் சேர்த்து சுமார் 2-3 நிமிடங்கள்  வதக்கவும்.

பின்பு அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.

ஆறியபின் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான புதினா சட்னி தயார். தேவைப்பட்டால் கடுகு தாளித்துக் கொள்ளலாம்.



Tuesday, August 15, 2023

கறுப்பு உளுந்து லட்டு/Black Gram Laddu

பெண் குழந்தைகள் பூப்பெய்தும் போது அவர்கள் இடுப்பெலும்பு வலுப்பெறவும், கர்ப்பப்பை வலுப்பெறவும் உளுந்து மிக உதவியாக இருப்பதால் உளுந்து களி, உளுந்து லட்டு போன்றவற்றை அவர்களுக்கு அளிப்பது வழக்கம். இந்த உளுந்து லட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு வகை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி இந்த லட்டு சாப்பிட்டு வரும் போது எலும்பு வலுப்பெறும்.

தேவையான பொருட்கள்

உளுந்து - 1 கப்

பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன்

பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

பொடித்த நாட்டுசர்க்கரை - 1/2 கப்

நல்லண்ணெய் அல்லது நெய் - 1/2 கப்

செய்முறை

ஒரு இரும்பு கடாயை சூடாக்கி அதில் உளுந்தை வறுக்கவும். எண்ணெய் எதுவும் சேர்க்க தேவையில்லை. உளுந்து நன்றாக வறுபட்டு வரும் போது நல்ல மணம் வரும். உளுந்து வறுபட்டு விட்டதா என்பதை அறிய ஒரு உளுந்தை எடுத்து சூடு ஆற வைத்து வாயில் போட்டு மென்று பார்க்கும் போது எளிதாக மென்று சாப்பிட வந்தால் உளுந்து வறுபட்டு விட்டது என்று அர்த்தம். உளுந்து வறுபட்டபின் அதை ஒரு தட்டில் மாற்றி ஆற வைக்கவும். 

அதன்பின் அதே கடாயில் பச்சரிசியை அதன் நிறம் மாறும் வரை வறுக்கவும்.வறுபட்டபின் அதை ஒரு தட்டில் மாற்றி ஆற வைக்கவும்.

அதன்பின் அதே கடாயில் பொட்டுக்கடலையை 1 நிமிடம் வறுக்கவும்.வறுபட்டபின் அதை ஒரு தட்டில் மாற்றி ஆற வைக்கவும்.

இவை மூன்றும் ஆறியபின் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பின் அதனுடன் பொடித்த நாட்டுசர்க்கரை சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

ஒரு கடாயில் நல்லண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடாக்கி அதை உளுந்து மாவில் சேர்த்து லட்டுகளாக உருண்டை பிடிக்கவும். லட்டுகளை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால் 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.



Friday, August 11, 2023

உருளைக்கிழங்கு வறுவல்/Potato fry

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கை வைத்து பலவகையான உணவு பதார்த்தங்களை தயார் செய்யலாம். அதில் மிக எளிதாக இந்த உருளைக்கிழங்கு வறுவல் செய்யலாம். இந்த வறுவல் தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுக்கு ஏற்ற ஒன்று.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 2

மஞ்சள் - 1/8 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/2டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

உருளைக்கிழங்கை கழுவி தோலை கத்தி வைத்து சுரண்டி நீக்கவும். தோல் முழுவதும் நீக்காமல் ஒன்றிரண்டு இடங்களில் ஒட்டிக் கொண்டிருந்தால் நல்லது. 

உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஓர் இரும்பு கடாயை ( தோசைக்கல் மாதிரி அகன்றதாக இருக்கவேண்டும். ) அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விடவும். 

எண்ணெய் சூடானதும் நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து கிளறவும். அதனுடன் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். 2 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறிவிடவும். அப்போது தான் கடாயில் ஒட்டாமல் இருக்கும். லேசான தீயிலேயே வைத்து வேகவைக்கவும்.

உருளைக்கிழங்கு முக்கால் பதம் வெந்ததும் அதில் மிளகாய்தூள் சேர்த்து கிளறவும். 2 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறி விடவும். உருளைக்கிழங்கு வெந்ததும் தீயை அதிகமாக வைத்து கைவிடாமல் கிளறவும். உருளைக்கிழங்கு துண்டுகள் பொரிந்து வரும்போது அடுப்பை அணைக்கவும். இரும்புக் கடாயிலிருந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி சூடாக பரிமாறவும்.