Showing posts with label healty breakfast. Show all posts
Showing posts with label healty breakfast. Show all posts

Monday, July 17, 2023

ராகி/கேழ்வரகு இட்லி, Ragi Idly

ராகி/கேழ்வரகு, சிறு தானிய வகையைச்சேர்ந்தது. ராகியில் அதிக அளவு கால்சியம் உள்ளது. அனைவருக்கும் குறிப்பாக பெண்களுக்கும் சிறு குழந்தைகளுக்கும் அதிக அளவு கால்சியம் தேவைப்படுவதால் ராகியை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியம். ராகியில் பலவிதமான உணவு பதார்த்தங்கள் செய்யலாம். ராகி தோசை,ராகி இட்லி,ராகி புட்டு,ராகி இடியாப்பம்,ராகி கொழுக்கட்டை,ராகி ஆப்பம் என்று அரிசியில் என்னவெல்லாம் செய்யலாமோ அத்தனையும் ராகியிலும் செய்து அசத்தலாம். வாரத்தில் 3 நாட்களாவது ராகி உணவு எடுத்துக்கொள்வது அவசியம்.

தேவையான பொருட்கள்

ராகி/கேழ்வரகு மாவு - 1 கப்

இட்லி அரிசி - 3 கப்

உளுந்து - 1 கப்

உப்பு - தேவையான அளவு

செய்முறை

உளுந்தை 3 முறை நன்றாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, உளுந்து ஊற ஏற்ற அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். அதேப் போன்று அரிசியையும் 3 முறை நன்றாகக் கழுவி, ஒரு பாத்திரத்தில் எடுத்துக் கொண்டு, அரிசி ஊற ஏற்ற அளவு தண்ணீர் ஊற்றி 4 மணி நேரம் ஊற வைக்கவும். 4 மணி நேரத்திற்கு பிறகு முதலில் உளுந்தை மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். அதேப் போன்று அரிசியையும் மிக்ஸி அல்லது கிரைண்டரில் அரைத்துக் கொள்ளவும். அரைத்த உளுந்தையும் அரிசியையும் ஒன்றாகக் கலக்கவும். அதனுடன் ராகி மாவையும் சிறிது சிறிதாக சேர்த்து கலக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து 8 மணி நேரம் புளிக்க வைக்கவும். 8 மணி நேரத்திற்கு பிறகு மாவை ஒரு கரண்டியால் கலக்கி பின்பு இட்லி தட்டில் ஊற்றி வேக வைத்து எடுத்தால் ஆரோக்கியமான ராகி இட்லி தயார். தொட்டுக்கொள்ள தேங்காய் சட்னி அல்லது சாம்பார் நன்றாக இருக்கும்.

குறிப்பு

ராகி மாவு இல்லையென்றால் முழு ராகியை 4 மணி நேரம் ஊற வைத்து அரைத்து, உளுந்து அரிசி மாவுடன் கலக்கலாம்.

ஒரு கப் ராகி மாவு மட்டுமே சேர்ப்பதால் அரிசி இட்லிக்கும் ராகி இட்லிக்கும் ருசியில் பெரிய வித்தியாசம் தெரியாது. அதனால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். பெரியவர்கள் மட்டுமே சாப்பிடுவதாக இருந்தால் 2 கப் ராகி, 2 கப் இட்லி அரிசி சேர்த்துக் கொள்ளலாம்.



மேலும் சில ராகி ரெசிபிகளை பார்க்க கீழே உள்ள லிங்கை க்ளிக் செய்து பார்க்கவும்.

ராகி இடியாப்பம் ரெசிபியை காண இங்கே க்ளிக் செய்யவும்.


ராகி புட்டு ரெசிபியை காண இங்கே க்ளிக் செய்யவும்.