Showing posts with label அசைவம். Show all posts
Showing posts with label அசைவம். Show all posts

Thursday, July 6, 2023

மட்டன் மசாலா - Mutton Masala

 சுலபமான முறையில் இந்த மட்டன் மசாலா செய்யலாம். அதிக வேலையிருக்கும் நாட்களில் அல்லது சோம்பலான நாட்களில் அவசர அவசரமாக மட்டன் சமைக்க ஏற்ற முறை இது.

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி -1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 15 எண்ணம்

இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்

மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

மல்லித்தூள் - 1 ஸ்பூன்

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

பட்டைத்தூள் - 1/8 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

நட்சத்திரபூ -1

கிராம்பு - 4 எண்ணம்

உப்பு - தே.அளவு

கறிவேப்பிலை - சிறிது

மல்லி தழை - சிறிது

செய்முறை

ஆட்டுக்கறியை கழுவி ஒரு குக்கரில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்,இஞ்சி பூண்டுவிழுது,மஞ்சள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மிளகுத்தூள்,பட்டைத்தூள்,சோம்பு,நட்சத்திரபூ,கிராம்பு,உப்பு,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும். கொதிவந்ததும் குக்கரை மூடி வெயிட் போடவும். சுமார் 20 லிருந்து 25 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து வேகவைத்து இறக்கவும். பின்பு மல்லி தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு

ஆட்டுக்கறியை குறைந்த தீயில் வேகவைப்பதால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அதிக தீயில் வேகவைப்பதாக இருந்தால் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.



Wednesday, February 4, 2009

நண்டு மசாலா


தேவையான பொருட்கள் :

நண்டு - 2 பெரியது

தேங்காய் (துருவியது) - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 15

மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/8 டீ ஸ்பூன்

சீரகம் - 1/ டீ ஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கு

கடுகு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கு


செய்முறை:

நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் சிறிது வதங்கிய பின் நண்டைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்பு வாணலியை மூடி வைத்து தீயை மெலிதாக வைக்கவும். இடைஇடையே கிளறி விடவும். 15 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். நண்டில் இருக்கும் தண்ணீர் வற்றி வரண்டு வரும்போது தீயை அணைத்து விடவும். சாதத்துடன் பரிமாற நண்டு மசாலா தயார்.

Tuesday, September 23, 2008

சுறா மீன் புட்டு :


சுறா மீன் புட்டு முதல் முறையாக செய்தேன். இல்லத்தரசி அவர்களின் செய்முறையைப் பார்த்து செய்தேன். மிகவும் ருசியாக இருந்தது. இல்லத்தரசியின் செய்முறை இங்கே.

தேவையான பொருட்கள் :

சுறா மீன் துண்டு - 300 கிராம்

வெங்காயம் ( பொடியாக நறுக்கியது ) - 3 அல்லது 4

பூண்டு ( பொடியாக நறுக்கியது ) - 6 பல்

பச்சை மிளகாய் - 3

கறிவேப்பிலை - சிறிது

மல்லித் தழை - சிறிது

முழு உளுந்து - 1 டீ ஸ்பூன்

கடுகு - 1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - சிறிது

சீரகம் - 1/2 டீ ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

சுறா மீன் துண்டுகளை சூடான நீரில் போட்டு 10-15 நிமிடங்கள் வேக வைக்கவும். அதனுடன் மஞ்சள் சேர்க்கவும். மீன் துண்டுகள் வெள்ளை நிறத்தில் மாறிவிட்டால் அது வெந்து விட்டது என்று அர்த்தம். மீன் துண்டுகளை தனியாக எடுத்து பரலாக/ உதிரியாக உதிர்த்து வைக்கவும்.


கடாயை சூடாக்கவும். அதில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து பின்பு முழு உளுந்து மற்றும் சீரகம் சேர்த்து வறுக்கவும். அதனுடன் பூண்டு, பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை அதனுடன் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். உதிர்த்து வைத்துள்ள சுறா மீனை அத்துடன் சேர்த்து ஐந்து நிமிடங்கள் கிளறவும். உப்பு சேர்த்து ஐந்து முதல் பத்து நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். நறுக்கி வைத்துள்ள மல்லித் தழை சேர்த்து பரிமாறவும்.

Sunday, September 14, 2008

முட்டை தொக்கு:


தேவையான பொருட்கள்:

முட்டை - 2 எண்ணம்

வெங்காயம் - 1

தக்காளி - 1

பூண்டு - 2 பல்

இஞ்சி - சிறிய துண்டு

மிளகாய் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்

தனியா தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

மல்லித் தழை - சிறிது

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - தேவைக்கு

கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை :

முட்டைகளை வேக வைத்து தோல் நீக்கவும். தக்காளியை நறுக்கிக் கொள்ளவும். வெங்காயம், பூண்டு இவற்றை நீள வாக்கில் நறுக்கவும். இஞ்சியை பொடியாக நறுக்கவும். மல்லித் தழையையும் பொடியாக நறுக்கவும். கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பின்பு கறிவேப்பிலையை சேர்க்கவும். அதனுடன் வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் நன்கு வதங்கியவுடன் தக்காளியைச் சேர்த்து வதக்கவும். பின்பு நறுக்கி வைத்துள்ள இஞ்சி, பூண்டைச் சேர்த்து வதக்கவும். சிறிது வதங்கிய பின்பு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து வதக்கவும். அதனுடன் உப்பு சேர்த்து நன்கு வேகும் வரை மிதமான தீயில் வைக்கவும். நன்கு வெந்தபிறகு தீயை அணைத்து விட்டு வேக வைத்த முட்டைகளை ஒரு சில இடங்களில் கீறி வேக வைத்த கலவையுடன் சேர்க்கவும். முட்டைகளை ஒரு சில இடங்களில் கீறினால் தான் மசாலா முட்டையின் உள் சென்று சாப்பிடும் பொது நன்றாக இருக்கும். இறுதியில் நறுக்கிய மல்லித் தழையைச் சேர்த்து பரிமாறவும்.
இந்த முட்டை தொக்கு ஆப்பம், சப்பாத்தி, சாதம் போன்றவைகளுடன் சாப்பிட நன்றாக இருக்கும்.

Thursday, July 17, 2008

சென்னா கூனி (Baby Shrimp) பொரியல் :-

சென்னா கூனியை விரும்பாத ஆட்கள் கிடையாது. சில காலங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த சென்னா கூனி சிறிய இறால் வகையைச் சார்ந்தது. சென்னா கூனியை முருங்கை இலையுடன் சேர்த்து சமைப்பது தான் எங்கள் ஊர் வழக்கம். முருங்கை இலை இரும்புச்சத்துக்கு பெயர் போனது. முருங்கை இலை பொரியல் சிறிது கடுப்பு தன்மை கொண்டதால் சிலர் அதை விரும்பமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சென்னா கூனியும் முருங்கை இலையும் சேர்த்து பொரியல் செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். முருங்கை இலையின் கடுப்பும் தெரியாது அதே சமயத்தில் இது மிகுந்த சத்தானதும் கூட.


தேவையான பொருட்கள் :

சென்னா கூனி - 250 கிராம்

முருங்கை இலை(உருவியது) - 1 1/2 கப்

தேங்காய் (துருவியது) - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 15

மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/8 டீ ஸ்பூன்

சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கு

செய்முறை:

சென்னா கூனியை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பரலாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் சிறிது வதங்கிய பின் சென்னா கூனி மற்றும் முருங்கை இலையைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்பு வாணலியை மூடி வைத்து தீயை மெலிதாக வைக்கவும். இடைஇடையே கிளறி விடவும். 15 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். கூனி வறண்டு நல்ல மணம் கொடுக்கும். அப்பொழுது தீயை அணைத்து விடவும். சாதத்துடன் பரிமாற கூனி தயார். மீன்

Friday, July 11, 2008

மீன் குழம்பு (Fish Curry) :-


கடற்கரை மாவட்டம் என்பதாலோ என்னவோ கன்னியாகுமரி மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு மீன். கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்யப்படும் உணவுகளில் தேங்காய் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான சமையல் செய்யப்படுகிறது. அதைப் போன்றே தமிழ் நாட்டிலும் ஒவ்வொரு மாவாட்டத்திலும் வித்தியாசமான சமையல் செய்யப்படுகிறது. இந்த மீன் குழம்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்யப்படும் சமையல் வகையாகும். இனி இந்த மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
மீன் - 500gms
தேங்காய் - 3/4 கப்
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 5 பல்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
தனியா தூள் - 4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
மீனைக் கழுவி சுத்தம் செய்து அதைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். புளியை 1/2 கப் நீரில் ஊற வைக்கவும். தேங்காயுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு, வெந்தயம், ஓமம், தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைத்திருக்கும் மீனுடன் அரைத்த கலவையை சேர்க்கவும். அதனுடன் ஊற வைத்திருக்கும் புளியைக் கரைத்து வடிகட்டிய நீர், 1 1/2 கப் நீர் மற்றும் உப்பைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதிக்கும் வரை தீயை நன்கு வைத்து கொதித்த பின்பு தீயை குறைத்து வைக்கவும். குறைந்தது 20 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். குழம்பு வற்றி வரும் போது தீயை அணைத்து விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து குழம்பில் சேர்க்கவும். மீன் குழம்பு தயார்.