Showing posts with label non veg. Show all posts
Showing posts with label non veg. Show all posts

Wednesday, July 12, 2023

வறுத்தரைத்த கோழி குழம்பு, chicken curry made with roasted coconut

தேவையான பொருட்கள்

கோழிக்கறி -1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 15 எண்ணம்

தக்காளி - 1

இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்

தேங்காய் துருவல் - 3/4 கப்

மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

மல்லித்தூள் - 1 1/2 ஸ்பூன்

பட்டைத்தூள் - 1/8 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

நட்சத்திரபூ -1

கிராம்பு - 4 எண்ணம்

கல்பாசி - சிறிது

உப்பு - தே.அளவு

தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கறிவேப்பிலை - சிறிது

மல்லி தழை - சிறிது

செய்முறை

கோழிக்கறியை கழுவி, சிறிதாக அரிந்து கொள்ளவும்.  ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடாக்கி அதில் தேங்காய் துருவலைச் சேர்த்து அதைக் கிளறவும். அடிபிடிக்காமல் தொடர்ந்து கிளறவும். தேங்காய்த்துருவல் பொன்னிறமாக மாறும் வரை பொறுமையாக வறுக்கவும். பொன்னிறமாக மாறியதும் அதனுடன் சோம்பு,நட்சத்திரபூ ,கிராம்பு,கல்பாசி சேர்த்து 2 நிமிடங்கள் வறுக்கவும். அதன் பிறகு மல்லித்தூள்,மிளகாய்த்தூள்,பட்டைத்தூள், சேர்த்து 1 நிம்டம் வறுத்துவிட்டு அடுப்பிலிருந்து இறக்கி வேறொரு தட்டிற்கு மாற்றி ஆற வைக்கவும். இப்போது வாணலி ஒன்றை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் விட்டு சிறிது சோம்பு சேர்க்கவும். பின்பு பொடியாக அரிந்த சின்ன வெங்காயம் சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கி பின்பு தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு வதங்கி மசிந்த பின் இஞ்சி பூண்டு விழுது,மஞ்சள் சேர்த்து வதக்கவும்.பின்பு அதனுடன் கோழிக்கறியைச் சேர்த்து கிளறவும். அதனுடன் உப்பு சேர்த்து மூடி வைத்து 5 நிமிடங்கள் வேகவைக்கவும். அதற்கிடையே வறுத்து ஆற வைத்திருக்கும் தேங்காய் கலவையை மிக்சியில் சேர்த்து தண்ணீர் விட்டு அரைத்துக் கொள்ளவும். அரைத்த தேங்காயை வெந்துகொண்டிருக்கும் கோழிக்கறியுடன் சேர்த்து குழம்புக்கு தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும். கொதி வந்த பிறகு குழம்புக்குத் தேவையான உப்பு சேர்க்கவும். ஏற்கெனவே கோழிக்கறிக்கு உப்பு சேர்த்திருப்பதால், சிறிதளவு உப்பே குழம்புக்குத் தேவை. அதனால் குழம்பை சுவை பார்த்த பிறகே குழம்பிற்குத் தேவையான உப்புச் சேர்க்கவும். குழம்பு நன்கு கொதித்து, கோழிக்கறி வேகும் வரை வைத்திருந்து பின்பு கறிவேப்பிலை மற்றும் மல்லி இலை சேர்த்து இறக்கவும்.



Friday, July 11, 2008

மீன் குழம்பு (Fish Curry) :-


கடற்கரை மாவட்டம் என்பதாலோ என்னவோ கன்னியாகுமரி மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு மீன். கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்யப்படும் உணவுகளில் தேங்காய் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான சமையல் செய்யப்படுகிறது. அதைப் போன்றே தமிழ் நாட்டிலும் ஒவ்வொரு மாவாட்டத்திலும் வித்தியாசமான சமையல் செய்யப்படுகிறது. இந்த மீன் குழம்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்யப்படும் சமையல் வகையாகும். இனி இந்த மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
மீன் - 500gms
தேங்காய் - 3/4 கப்
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 5 பல்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
தனியா தூள் - 4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
மீனைக் கழுவி சுத்தம் செய்து அதைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். புளியை 1/2 கப் நீரில் ஊற வைக்கவும். தேங்காயுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு, வெந்தயம், ஓமம், தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைத்திருக்கும் மீனுடன் அரைத்த கலவையை சேர்க்கவும். அதனுடன் ஊற வைத்திருக்கும் புளியைக் கரைத்து வடிகட்டிய நீர், 1 1/2 கப் நீர் மற்றும் உப்பைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதிக்கும் வரை தீயை நன்கு வைத்து கொதித்த பின்பு தீயை குறைத்து வைக்கவும். குறைந்தது 20 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். குழம்பு வற்றி வரும் போது தீயை அணைத்து விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து குழம்பில் சேர்க்கவும். மீன் குழம்பு தயார்.