Thursday, August 24, 2023

கோவைக்காய் சட்னி/கோவைக்காய் துவையல்/Ivygourd Chutney

கோவைக்காய், கொடியில் காய்க்கும் ஒரு காய் வகை. பார்ப்பதற்கு சிறிய வெள்ளரிக்காய் போன்று இருப்பதோடு மட்டுமல்லாமல் சமைக்காமல் பச்சை காயாக சாப்பிடும் போது வெள்ளரிக்காயின் சுவையிலேயே இருக்கும். கிராமங்களில் வேலிகளில் கோவைக்காய் கொடிகள் படர்ந்திருப்பதைப் பார்க்கலாம். கோவைக்காய் நன்கு முற்றுவதற்கு முன்பே கொடியிலிருந்து பறித்துவிடவேண்டும். முற்றிய காய்கள் சிறிது புளிப்பாக இருக்கும். கோவைக்காய் எளிதில் வளர்க்கக் கூடிய ஒரு கொடிவகை. கோவைக்காய் செடியிலிருந்து ஒரு கம்பு எடுத்து நட்டு வைத்தாலே வளர்ந்து விடும். எல்லா சீசனிலும் காய்க்கக் கூடிய ஒரு கொடி இது. கோவைக்காய் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு ஏற்ற காய். அதனால் நீரிழிவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி கோவைக்காய் சட்னி,கோவைக்காய் பொரியல், கோவைக்காய் அவியல், கோவைக்காய் பிரட்டல் என்று வகை வகையாக செய்து சாப்பிடலாம்.



தேவையான பொருட்கள்

கோவைக்காய் - 20 எண்ணம்

உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

மிளகாய்வத்தல் - 2 முதல் 4 வரை (காரத்திற்கு ஏற்றவாறு)

பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை

தக்காளி -1

நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

செய்முறை

கோவைக்காயை கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயை சூடாக்கி அதில் நல்லெண்ணெய் சேர்க்கவும். அதில் உளுந்து சேர்த்து வதக்கவும். உளுந்து சிவக்கும் வரை வதக்கவும். உளுந்து சிவந்தபின் அதில் மிளகாய் வத்தல் சேர்க்கவும்.

பின் அதனுடன் கோவைக்காயை சேர்த்து அரைவேக்காடு வேகும் வரை வதக்கவும். அதாவது கோவைக்காயின் பச்சை நிறம் மாறும் வரை வதக்கவும். வதங்கியபின் அதில் இஞ்சி மற்றும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

பின்பு பெருங்காயத்தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கவும். பின்பு அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.

ஆறியபின் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான கோவைக்காய் சட்னி தயார். பரிமாறும் போது கடுகு தாளித்துக் கொள்ளலாம். கடுகு தாளிக்காமலேயே சட்னி நன்றாக இருக்கும். 


Wednesday, August 23, 2023

சுக்கு மல்லி காபி/Dried Ginger and Coriander Coffee

சளித்தொல்லை, தொண்டைவலி, இருமல் இருக்கும்பொழுது இந்த சுக்கு மல்லி காபி தொண்டைக்கு இதமாகவும் அதே நேரத்தில் ஒரு நிவாரணியாகவும் திகழ்கிறது. துளசி இலைகள் சேர்ப்பதால் இருமலை குறைக்கும் ஒரு வீட்டு மருந்தாகவும் இருக்கும். 

தேவையான பொருட்கள்

சுக்கு துண்டு - 1 இஞ்ச் அளவு

முழுமல்லி - 1/2 டீஸ்பூன்

முழுமிளகு - 1/4 டீஸ்பூன்

முழுசீரகம் - 1/4 டீஸ்பூன்

துளசி இலை - 10 எண்ணம்

கருப்புக்கட்டி - ஒரு எலுமிச்சம்பழ அளவு

தண்ணீர் - 2 கப்

செய்முறை

சுக்கு,மல்லி,மிளகு,சீரகம் போன்றவற்றை தனித்தனியே இடிகல்லில் போட்டு கொரகொரப்பாக இடித்துக்கொள்ளவும்.

ஒரு பாத்திரத்தில் 2 கப் தண்ணீர் எடுத்து அதை சூடாக்கவும். பின் அதில் கருப்புக்கட்டி சேர்க்கவும். 

ஒரு கொதிவந்ததும் அதில் இடித்துவைத்துள்ள சுக்கு,மல்லி,மிளகு,சீரகத்தை சேர்க்கவும். பின் அதனுடன் துளசி இலைகளை சேர்த்து ஒரு கரண்டி வைத்து கலக்கவும். கரண்டி வைத்து கலக்கும் போது கருப்புக்கட்டி கரையாமல் இருந்தால் கூட கரைந்துவிடும்.

3 முதல் 4 நிமிடங்கள் கொதிக்கவிட்டு அடுப்பிலிருந்து இறக்கவும். 3 நிமிடங்கள் கழித்து சுக்கு மல்லி காபி குடிப்பதற்கு தயாராக இருக்கும். 3 நிமிடங்கள் காத்திருப்பதால் கருப்புக்கட்டியில் உள்ள சிறு அழுக்குகள் அடியில் தங்கிவிடும்.சல்லடை வைத்து அரித்து குடிக்கவும்.



Friday, August 18, 2023

புதினா துவையல் /புதினா சட்னி/Mint Chutney

புதினா சட்னி, இட்லி, தோசைக்கு ஏற்ற ஒரு சட்னி. சுடு சாதத்துடன் புதினா துவையல் சேர்த்து பிசைந்து சாப்பிடும் போது அதன் ருசி அபாரமாக இருக்கும்.

புதினா இலைகள் - 1 கப்

தேங்காய் - 1/2 கப்

உளுந்து - 2 டேபிள்ஸ்பூன்

இஞ்சி - சிறிய துண்டு

மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

பெருங்காயப்பொடி - ஒரு சிட்டிகை

புளி - ஒரு கொட்டை

நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன் 

உப்பு - தேவையான அளவு

செய்முறை

புதினா இலைகளை நன்கு கழுவி எடுத்துக்கொள்ளவும். ஒரு கடாயை சூடாக்கி அதில் நல்லெண்ணெய் சேர்க்கவும். அதில் உளுந்து சேர்த்து வதக்கவும். உளுந்து பொன்னிறமாகும் வரை வதக்கவும். 

பின் அதனுடன் புதினா இலைகளை சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். புதினா இலைகள் வதங்கியபின் அதில் இஞ்சி, புளி சேர்த்து வதக்கவும். 

பின்பு மிளகாய்த்தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கிய பின் பெருங்காயத்தூள் சேர்த்து சில நொடிகள் வதக்கவும்.பின் தேங்காய் சேர்த்து சுமார் 2-3 நிமிடங்கள்  வதக்கவும்.

பின்பு அடுப்பை அணைத்துவிட்டு ஒரு தட்டிற்கு மாற்றி ஆறவிடவும்.

ஆறியபின் மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரைத்து எடுத்தால் சுவையான புதினா சட்னி தயார். தேவைப்பட்டால் கடுகு தாளித்துக் கொள்ளலாம்.



Tuesday, August 15, 2023

கறுப்பு உளுந்து லட்டு/Black Gram Laddu

பெண் குழந்தைகள் பூப்பெய்தும் போது அவர்கள் இடுப்பெலும்பு வலுப்பெறவும், கர்ப்பப்பை வலுப்பெறவும் உளுந்து மிக உதவியாக இருப்பதால் உளுந்து களி, உளுந்து லட்டு போன்றவற்றை அவர்களுக்கு அளிப்பது வழக்கம். இந்த உளுந்து லட்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு இனிப்பு வகை. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அடிக்கடி இந்த லட்டு சாப்பிட்டு வரும் போது எலும்பு வலுப்பெறும்.

தேவையான பொருட்கள்

உளுந்து - 1 கப்

பச்சரிசி - 2 டேபிள் ஸ்பூன்

பொட்டுக்கடலை - 2 டேபிள் ஸ்பூன்

பொடித்த நாட்டுசர்க்கரை - 1/2 கப்

நல்லண்ணெய் அல்லது நெய் - 1/2 கப்

செய்முறை

ஒரு இரும்பு கடாயை சூடாக்கி அதில் உளுந்தை வறுக்கவும். எண்ணெய் எதுவும் சேர்க்க தேவையில்லை. உளுந்து நன்றாக வறுபட்டு வரும் போது நல்ல மணம் வரும். உளுந்து வறுபட்டு விட்டதா என்பதை அறிய ஒரு உளுந்தை எடுத்து சூடு ஆற வைத்து வாயில் போட்டு மென்று பார்க்கும் போது எளிதாக மென்று சாப்பிட வந்தால் உளுந்து வறுபட்டு விட்டது என்று அர்த்தம். உளுந்து வறுபட்டபின் அதை ஒரு தட்டில் மாற்றி ஆற வைக்கவும். 

அதன்பின் அதே கடாயில் பச்சரிசியை அதன் நிறம் மாறும் வரை வறுக்கவும்.வறுபட்டபின் அதை ஒரு தட்டில் மாற்றி ஆற வைக்கவும்.

அதன்பின் அதே கடாயில் பொட்டுக்கடலையை 1 நிமிடம் வறுக்கவும்.வறுபட்டபின் அதை ஒரு தட்டில் மாற்றி ஆற வைக்கவும்.

இவை மூன்றும் ஆறியபின் மிக்ஸியில் சேர்த்து நன்கு அரைத்துக்கொள்ளவும். பின் அதனுடன் பொடித்த நாட்டுசர்க்கரை சேர்த்து அரைத்து ஒரு பாத்திரத்திற்கு மாற்றிக்கொள்ளவும்.

ஒரு கடாயில் நல்லண்ணெய் அல்லது நெய் சேர்த்து சூடாக்கி அதை உளுந்து மாவில் சேர்த்து லட்டுகளாக உருண்டை பிடிக்கவும். லட்டுகளை ஒரு காற்றுப்புகாத டப்பாவில் போட்டு வைத்தால் 5 நாட்கள் வரை கெடாமல் இருக்கும்.



Friday, August 11, 2023

உருளைக்கிழங்கு வறுவல்/Potato fry

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் ஒரு கிழங்கு உருளைக்கிழங்கு. இந்த உருளைக்கிழங்கை வைத்து பலவகையான உணவு பதார்த்தங்களை தயார் செய்யலாம். அதில் மிக எளிதாக இந்த உருளைக்கிழங்கு வறுவல் செய்யலாம். இந்த வறுவல் தயிர் சாதம், ரசம் சாதம், சாம்பார் சாதம் போன்றவற்றுக்கு ஏற்ற ஒன்று.

தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 2

மஞ்சள் - 1/8 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/2டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

தேங்காய் எண்ணெய் - 2 டேபிள்ஸ்பூன்

செய்முறை

உருளைக்கிழங்கை கழுவி தோலை கத்தி வைத்து சுரண்டி நீக்கவும். தோல் முழுவதும் நீக்காமல் ஒன்றிரண்டு இடங்களில் ஒட்டிக் கொண்டிருந்தால் நல்லது. 

உருளைக்கிழங்கை சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும். ஓர் இரும்பு கடாயை ( தோசைக்கல் மாதிரி அகன்றதாக இருக்கவேண்டும். ) அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விடவும். 

எண்ணெய் சூடானதும் நறுக்கிய உருளைக்கிழங்கு துண்டுகளைச் சேர்த்து கிளறவும். அதனுடன் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். 2 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறிவிடவும். அப்போது தான் கடாயில் ஒட்டாமல் இருக்கும். லேசான தீயிலேயே வைத்து வேகவைக்கவும்.

உருளைக்கிழங்கு முக்கால் பதம் வெந்ததும் அதில் மிளகாய்தூள் சேர்த்து கிளறவும். 2 நிமிடங்களுக்கு ஒரு முறை கிளறி விடவும். உருளைக்கிழங்கு வெந்ததும் தீயை அதிகமாக வைத்து கைவிடாமல் கிளறவும். உருளைக்கிழங்கு துண்டுகள் பொரிந்து வரும்போது அடுப்பை அணைக்கவும். இரும்புக் கடாயிலிருந்து வேறு பாத்திரத்திற்கு மாற்றி சூடாக பரிமாறவும்.



Sunday, July 30, 2023

காலிஃப்ளவர் பிரட்டல்/ Cauliflower stir fry

 தேவையான பொருட்கள்

காலிஃப்ளவர் - 1 சிறியது

தக்காளி -1/2

வெங்காயம் - 1

மஞ்சள் தூள் - 1/8 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

கறிமசால் தூள் - 1/8 டீஸ்பூன்

உப்பு - தேவையான அளவு

எண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்

கடுகு - 1/4 டீஸ்பூன்

கறிவேப்பலை - சிறிது

செய்முறை

காலிஃப்ளவரை சிறிதாக வெட்டி நீரில் கழுவி எடுத்து கொள்ளவும். ஒரு வாணலியில் தேவையான அளவு (காலிஃப்ளவர் மூழ்கும் அளவுக்கு) தண்ணீர் எடுத்துக்கொண்டு அதில் மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க வைக்கவும். ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட்டு அதில் வெட்டிவைத்தள்ள காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து 3 லிருந்து 4 நிமிடங்கள் மூடி வைக்கவும். 4 நிமிடங்களுக்குப் பிறகு காலிஃப்ளவர் துண்டுகளை தண்ணீரை வடித்துவிட்டு எடுத்துவைக்கவும். வெங்காயம், தக்காளியை சிறியதாக வெட்டவும். ஒரு வாணலியை சூடாக்கி அதில் எண்ணெய் விட்டு கடுகு சேர்க்கவும். கடுகு வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியபின் தக்காளி சேர்த்து வதக்கவும். தக்காளி வதங்கியபின் மிளகாய்த்தூள், கறிமசால் தூள், கறிவேப்பிலை மற்றும் சிறிது உப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியபின் காலிஃப்ளவர் துண்டுகளை சேர்த்து மசாலா நன்கு காலிஃப்ளவர் துண்டுகள் மீது படும்வரை பிரட்டவும். பின்பு அதை மூடி வைத்து காலிஃப்ளவர் வேகும்வரை வைத்திருந்து இறக்கி பரிமாறவும். 



Friday, July 28, 2023

பழம் பொரி/Banana Fritters

கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரளாவின் மிகப் பிரபலமான தின்பண்டங்களில் ஒன்று இந்த பழம் பொரி. இது நேந்திரம் பழத்தில் அதுவும் நன்கு கனிந்த பழத்தில் செய்தால் இதன் சுவை அபாரமாக இருக்கும். 

தேவையான பொருட்கள்

நேந்திரம் பழம் -2

மைதா மாவு - 1/2 கப்

அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்

சர்க்கரை - 2 டேபிள் ஸ்பூன்

தூள்உப்பு - தேவையான அளவு

மஞ்சள் தூள் - ஒரு சிட்டிகை

எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை

ஒரு பாத்திரத்தில் மைதா மாவு,அரிசி மாவு, சர்க்கரை, தூள்உப்பு, மஞ்சள் தூள் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்துக் கொள்ளவும். நேந்திரம் பழத்தின் தோலை உரித்து நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும். பஜ்ஜிக்கு வெட்டுவது போல் நீள வாக்கில் அதே நேரத்தில் சிறிது தடிமனாக வெட்டிக் கொள்ளவும். அடுப்பில் வாணலி வைத்து, எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெட்டி வைத்துள்ள பழத்துண்டுகளை, கரைத்து வைத்துள்ள மாவில் தோய்த்து பொரித்து எடுத்தால் பழம் பொரி தயார்.