Showing posts with label mashed topioca. Show all posts
Showing posts with label mashed topioca. Show all posts

Friday, August 22, 2008

மரவள்ளிக் கிழங்கு மசியல்

மரவள்ளிக் கிழங்கு நமது நாட்டில் விளையும் கிழங்குகளில் ஓன்று. இந்த மரவள்ளிக் கிழங்குகளிலே பல்வேறு வகை இருக்கின்றதாகக் கேள்விப்பட்டிருகிறேன். எனக்குத் தெரிந்த ஒரே மரவள்ளிக் கிழங்குவகை நூறு முட்டன் மட்டுமே. நூறு முட்டன் மரவள்ளிக் கிழங்கு எளிதாக வேகும் தன்மை கொண்டது. அதனால் தானோ என்னவோ எங்கள் ஊர் பக்கங்களில் நூறு முட்டன் மரவள்ளிக் கிழங்கு வகைகளையே பெரும்பான்மையோர் பயிருடுகின்றனர்.
மரவள்ளிக் கிழங்குக்கு தொட்டுக் கொள்ள மீன் குழம்பு தான் சரியான ஓன்று என்பது என் கருத்து . மரவள்ளிக் கிழங்கு + மீன் குழம்பு ருசியை அடிச்சிக்க முடியாது. ஒரு காலத்தில் எங்கள் ஊரில் உள்ள ஏழை மக்கள் அரிசி வாங்க முடியாத நிலையில் உள்ள மக்கள் வெறும் மரவள்ளிக் கிழங்கு + மீன் ( அந்த காலத்தில் மரவள்ளிக் கிழங்கு, மீன் மலிவாக இருந்திருக்கலாம் ) மட்டுமே சாப்பிட்டு வந்தார்கள் என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். மரவள்ளிக் கிழங்கு + மீன் இரண்டும் மிகுந்த சத்து நிறைந்ததாகவே கருதுகிறேன். " மீனும் கிழங்கும் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு. இதை ஒன்றும் செய்ய முடியாது " என்ற வீர வசனங்களையும் பெரியவர்கள் வாயிலிருந்து கேட்டிருக்கிறேன்.
இந்தக் கிழங்கை வேக வைத்து சாப்பிடும் பொது தொட்டுக் கொள்ள தேங்காய்த் துவையல், காய்ந்த மிளகாய் துவையல், மீன் குழம்பு போன்றவை ஏற்றதாக இருக்கும். மரவள்ளிக் கிழங்கு மசியல் செய்தால் தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமலே சாப்பிடலாம். இந்த மசியல் மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஓன்று. இனி செய்முறையைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
மரவள்ளிக் கிழங்கு - 1 ( சிறியது )
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபில்ஸ்பூன்
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 1
செய்முறை:
மரவள்ளிக் கிழங்கை தொலுரித்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை போட்டு அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பாதி வெந்த பிறகு உப்பு சேர்க்கவும். கிழங்கு நன்கு வெந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு தண்ணீரை வடிகட்டவும். தேங்காய்த் துருவலை கிழங்குடன் சேர்த்து ஒரு கரண்டியின் உதவியுடன் நன்கு மசிக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பின்பு அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். தாளித்த கலவையை மசித்து வைத்திருக்கும் கிழங்கில் சேர்க்கவும். எண்ணெய் சேர்க்க விரும்பாதோர் தாளிக்காமலே தேங்காய் சேர்த்து மசித்து வைத்திருக்கும் கிழங்கை சாப்பிடலாம். ருசியாகவே இருக்கும்.