தேவையான பொருள்கள்
முள் இல்லாத மீன் துண்டுகள் -250 கிராம்
சின்ன வெங்காயம் - 10 எண்ணம்
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1/4 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1/2 டீஸ்பூன்
பூண்டு - 6 பல்
இஞ்சி - 1/2 இஞ்ச் துண்டு
நல்லெண்ணெய் - 1 டேபிள்ஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை
மீனை நன்றாக சுத்தம் செய்து கழுவி எடுத்துக்கொள்ளவும். ஒரு வாணலியில், சுத்தம் செய்து வைத்துள்ள மீனுடன் உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும். மீன் வெந்துவிட்டதா என்பதை அறிய ஒரு துண்டை வெட்டிப்பார்க்கவும். மீன் வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும்.
வெங்காயம் மற்றும் தக்காளியை சிறிதாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சி மற்றும் பூண்டை இடிகல்லில் சேர்த்து இடித்து எடுத்துக்கொள்ளவும். வாணலியில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு தாளிக்கவும். வெங்காயத்தைச் சேர்த்து ஒரிரு நிமிடங்கள் வதக்கவும். பின் நறுக்கிய தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.
தக்காளி மசிந்தவுடன் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து வதக்கவும். இவற்றுடன் சிறிதளவு உப்பு சேர்க்கவும். ஏற்கெனவே மீனில் உப்பு சேர்த்திருப்பதால் சிறிதளவே உப்பு சேர்க்கவும். வேகவைத்த மீன்துண்டுகளை அதிலிருக்கும் தண்ணீரிலிருந்து வடிகட்டிக்கொள்ளவும்.
வடிகட்டிய தண்ணீரை, வதக்கிக்கொண்டிருக்கும் வெங்காயம் தக்காளி மசாலாவுடன் சேர்த்து கொதிக்கவிடவும். ஒரு கொதி வந்தவுடன் வேகவைத்துள்ள மீன் துண்டுகளைச் சேர்த்து சுமார் 5 நிமிடங்கள் மூடி வைத்து வேகவைத்து, அடுப்பிலிருந்து இறக்கவும். சூடான சாதத்துடன் பரிமாறவும்.