Thursday, July 6, 2023

மட்டன் மசாலா - Mutton Masala

 சுலபமான முறையில் இந்த மட்டன் மசாலா செய்யலாம். அதிக வேலையிருக்கும் நாட்களில் அல்லது சோம்பலான நாட்களில் அவசர அவசரமாக மட்டன் சமைக்க ஏற்ற முறை இது.

தேவையான பொருட்கள்

ஆட்டுக்கறி -1/2 கிலோ

சின்ன வெங்காயம் - 15 எண்ணம்

இஞ்சி பூண்டு விழுது- 1 ஸ்பூன்

மஞ்சள் - 1/4 டீஸ்பூன்

மிளகாய்த்தூள் - 1 ஸ்பூன்

மல்லித்தூள் - 1 ஸ்பூன்

மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்

பட்டைத்தூள் - 1/8 டீஸ்பூன்

சோம்பு - 1/4 டீஸ்பூன்

நட்சத்திரபூ -1

கிராம்பு - 4 எண்ணம்

உப்பு - தே.அளவு

கறிவேப்பிலை - சிறிது

மல்லி தழை - சிறிது

செய்முறை

ஆட்டுக்கறியை கழுவி ஒரு குக்கரில் எடுத்துக் கொள்ளவும். அதனுடன் பொடியாக அரிந்த சின்ன வெங்காயம்,இஞ்சி பூண்டுவிழுது,மஞ்சள்,மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,மிளகுத்தூள்,பட்டைத்தூள்,சோம்பு,நட்சத்திரபூ,கிராம்பு,உப்பு,கறிவேப்பிலை சேர்த்து நன்றாக கலந்து அடுப்பில் மிதமான தீயில் வைக்கவும். கொதிவந்ததும் குக்கரை மூடி வெயிட் போடவும். சுமார் 20 லிருந்து 25 நிமிடங்கள் குறைந்த தீயில் வைத்து வேகவைத்து இறக்கவும். பின்பு மல்லி தழை தூவி பரிமாறவும்.

குறிப்பு

ஆட்டுக்கறியை குறைந்த தீயில் வேகவைப்பதால் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. அதிக தீயில் வேகவைப்பதாக இருந்தால் 1/2 கப் தண்ணீர் சேர்த்து வேகவைக்கவும்.



Monday, July 3, 2023

மிளகு ரசம் எளிதான முறையில் - Pepper Rasam

அதிக வேலையில்லாமல் எளிதான முறையில் இந்த ரசத்தை செய்யலாம். சளித்தொல்லை இருக்கும் சமயத்தில் இந்த ரசம் வைத்து சோறு சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

மிளகு - 15 எண்ணம்
சீரகம் - 1 டீஸ்பூன்
பூண்டு - 6 பற்கள்(சிறியது)
பெருங்காயப்பொடி - 1/8 டீஸ்பூன்
மஞ்சள் - 1/4 டீஸ்பூன்
தக்காளி - 1
புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
எண்ணெய் - 1 ஸ்பூன்
கடுகு - சிறிது
உப்பு - தே.அளவு
கறிவேப்பலை - சிறிது
மல்லி தழை - சிறிது

செய்முறை

முதலில் புளியை 1/2 கப் நீரில் ஊற வைக்கவும். மிக்ஸி ஜாரில் மிளகு மற்றும் சீரகம் சேர்த்து ஒரு சுற்று ஓடவிடவும். மிளகு மற்றும் சீரகம் ஒன்றிரண்டாக உடைந்திருக்கும். இதனுடன் பூண்டு, பெருங்காயப்பொடி, மஞ்சள் மற்றும் தக்காளி சேர்த்து அரைத்து எடுக்கவும். அடுப்பில் வாணலி வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றவும், பின்பு கடுகு சேர்த்து வெடித்ததும் அரைத்து வைத்திருக்கும் விழுதை சேர்க்கவும். அதனுடன் ஊறவைத்திருக்கும் புளியை கரைத்து வடிகட்டி சேர்க்கவும். இதனுடன் தேவையான அளவு நீர், உப்பு, கறிவேப்பலை சேர்த்து மூடி வைக்கவும். கொதித்து பொங்கி வரும் போது மல்லி தழை சேர்த்து இறக்கவும். சுவையான மிளகு ரசம் தயார்.




Tuesday, April 23, 2013

பெண்களுக்கான மருத்துவக் குறிப்புகள்


  • கருப்பைக் கோளாறுகள் உள்ளவர்கள் நெல்லிக்கனியை தினசரி சிறிது சேர்த்து வர கருப்பை நோய் குணமாவதொடு தாய்க்கும் வயிற்றில் உள்ள குழந்தைக்கும் சிறந்த டானிக்காக பயன்படுகிறது.

  • மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வயிற்று வலி தீர எலுமிச்சம் பழச்சாறு சாப்பிடவும்.

  • தாய்மார்கள் அன்றாடம் உணவு பதார்த்ததுடன் பப்பாளிக்கையை சமைத்து சாப்பிட்டு வர தாய்ப்பால் அதிகம் சுரக்கும்.

  • சில பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிக்கொண்டே போகும். அத்தகையப் பெண்கள் பப்பாளி பழுக்க ஆரம்பித்த பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர உடனே பலன் கிடைக்கும்.

  • தினமும் மூன்று வேளை பசும்பாலில் தேனும் நான்கு பூண்டுப் பற்களும் சேர்த்துப் பருகினால் தாய்ப்பால் நிறைய சுரக்கும். இதனால் குழந்தைகளுக்கு அஜீரணம், ஜலதோஷம் பேன்றவை வராமல் தடுக்கப்படும்.

  • கேழ்வரகு மாவுடன் எள்ளும், வெல்லமும் கலந்து அரைத்து அடை செய்து சாப்பிட்டால் தாய்ப்பால் சுரக்காத பெண்களுக்கு பால் சுரக்கும். தொடர்ந்து சாப்பிட உடல் ஆரோக்யமாக இருக்கும்.

  • கர்ப்பிணி பெண்கள் அடிக்கடி இளநீர், தர்ப்பூசணிப் பழம் ஆகியவை சாப்பிட்டால் குழந்தை வெளுப்பாகப் பிறக்கும். அழகாகவும் இருக்கும்.
 

Monday, April 30, 2012

அழகுக்குறிப்பு

* நரையைப் போக்க மருதாணி இலையைப் பறித்து சுத்தம் செய்து மைய அரைத்து இரவு படுக்கப் போகும் முன் தேய்த்து சிறிது காய்ந்ததும் படுத்துவிடலாம். மறுநாள் காலை எழுந்து குளித்தால் முடி சிறிது நிறம் மாறி இருக்கும். இம்மாதிரி தொடர்ந்து செய்து வர நரை போய் விடும்.

* மருதாணி இலையைச் சுத்தம் செய்து மைய அரைத்து சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் உலர வைத்தால் மாத்திரை போல் கிடைக்கும். பின் இதனை சலித்து தேங்காய் எண்ணெயில் கலந்து தடவி வர முடி வளர்ச்சி பெறும்.

* நெல்லிக்கனிகளைதண்ணீரில் போட்டு ஒரு இரவு ஊற வைத்து மறுநாள் அந்த நீரில் எலுமிச்சம் பழச்சாறை பிழிந்து பின் தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் சிறிது நாட்களிலேயே செம்பட்டை முடி கருப்பாக மாறும்.

* காரட் தினசரி சமையலில் சேர்த்துக் கொள்வதுடன் 2 டம்ளர் மோருடன் 2 காரட்டையும் போட்டு மைய அரைத்துக் குடித்து வர உடல் இளைக்க ஆரம்பித்து விடும். போதும் என்ற நிலை வந்தவுடன் சாப்பிடுவதை நிறுத்திவிடவும

* 50 மிலி இஞ்சிசாற்றை எடுத்து அடுப்பில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். கொதி வந்ததும் அடுப்பிலிருந்து இறக்கி தேன் 50 மிலி ஊற்றி ஆற வைத்து எடுத்துக் கொண்டு தினசரி காலை மாலை என 2 வேளை உணவுக்குப் பின் சாப்பிட்டு வர பருத்த வயறு குறையும்.

*நெல்லிக்காயை எலுமிச்சம்பழச் சாற்றை விட்டு மைய அரைத்து தலையில் தேய்த்து உலர வைத்து பின்னர் குளித்து வர தலை முடி உதிர்வது நின்று விடும்.


*மருதாணி இலையை அரைத்து உடல் மீது தேய்த்து வந்தால் உடல் பளபளப்பாகி கருப்பு நிறம் மாறும்.

* எலுமிச்சை சாறு பிழிந்து ஆவியை முகத்தில் 3 நாட்கள் பிடித்து வர முகம் பளபளப்பாகும்.

* கருவேப்பிலை அரைத்து தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வந்தால் முடி அடர்த்தியாகவும் கருப்பாகவும் இருக்கும்.

* காரட், எலுமிச்சம் பழச்சாறு இவற்றை தேங்காய் எண்ணையில் கலந்து காய்ச்சி தலையில் தேய்த்து வர முடி நன்றாக வளரும்.

* மருதாணி இலையை அரைத்து தலைக்கு குளித்து வந்தால் பேன், பொடுகு மறையும். நரையும் குறையும்.

* தேங்காய் எண்ணையில் மஞ்சள் தூளை நன்கு குழைத்து கண்களைச் சுற்றிலும் பூசி 10 நிமிடங்களுக்குப் பிறகு குளித்து வர கண்களைச் சுற்றிலும் காணப்படும் கருவளையம் மாறி விடும்.

* கருமையடைந்த முகம் பொலிவு பெற பாதம் பருப்பை பாலில் அரைத்து இரவில் முகத்தில் தொடர்ந்து பூசி வர பொலிவு பெறும்.

Tuesday, September 22, 2009

எளிதான புரோகோலி பொரியல்


தேவையான பொருட்கள் :

புரோகோலி - 1

சின்ன வெங்காயம் - 10

மிளகாய்த் தூள் - 1டீ ஸ்பூன்

உப்பு - தேவைக்கு

எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

கடுகு - சிறிது

செய்முறை :

புரோகோலி மற்றும் சின்ன வெங்காயத்தைச் சிறிதாக வெட்டிக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பின்பு சிறிதாக வெட்டிய புரோகோலியை போட்டு 5 நிமிடம் வதக்கவும்.


பின்னர் சிறிதாக வெட்டி வைத்துள்ள வெங்காயத்தைப் போட்டு கிளறவும். அதனுடன் உப்பு மற்றும் மிளகாய்த் தூள் சேர்த்து கிளறி 15 நிமிடங்கள் லேசான தீயில் வேகவிடவும். சுவையான ப்ரொகொலி பொரியல் ரெடி.


Saturday, April 4, 2009

சமையல் குறிப்புகள் :

* பண்டிகை காலங்களில் பலகாரங்கள் சுட்ட எண்ணெய் கசடுடன் மீதமாகும். மூன்று நான்கு உருளைக் கிழங்குத் துண்டுகளை அதில் பொரித்தெடுத்தால் எண்ணெய் சுத்தமாகிவிடும்.

* முருங்கைக் காய்கள் முற்றி விட்டால் தூக்கி எறிந்து விட வேண்டாம். அவற்றின் விதைகளின் உள்ளே இருக்கும் பருப்புகளை வறுத்து உண்டால் நிலக்கடலையைப் போன்ற ருசி இருப்பதுடன் உடலுக்குப் போஷாக்கையும் வலுவையும் கொடுக்கும்.

* கொத்தமல்லிச் சட்னி மீந்து விட்டால் மோரில் சட்னியைக் கரைத்து விடுங்கள். மசாலா மோர் தயார்.

* மீந்து போன உருளை, வாழை சிப்ஸ்களை வீணாக்காமல் மிக்ஸியில் கரகரப்பாகப் பொடித்து பொரியலுக்குத் தூவினால் பொரியல் கூடுதல் ருசியுடன் இருக்கும்.

* ஜாம் செய்யும் போது அதில் ஆப்பிள் சில துண்டுகள் நறுக்கிப் போடுங்கள். ஏனெனில் ஆப்பிளிலுள்ள பெக்டின் என்னும் பொருள் ஜாம் தயார் ஆவதற்கு மிகவும் உதவுகிறது.

* உப்பு ஜாடியில் இரண்டு பச்சை மிளகாயைப் போட்டு வைத்தால் உப்பு நீர்த்துப் போகாது.

* வெண்டைக்காயின் காம்புகளையும் தலைப்பாகத்தையும் நறுக்கி விட்டு வைத்தால் மறுநாள் சமைப்பதற்குள் முற்றிப் போகாமல் இருக்கும்.

* நான்ஸ்டிக் தோசைக்கல்லை உபயோகித்தவுடன் சூடாக இருக்கும் போதே அதை ஒரு துணியால் அழுத்தித் துடைக்க வேண்டும். ஆறின பிறது லிக்விட் சோப்பு போட்டு கழுவி விட்டால் கல்லின் ஓரம் தடிமனாக ஆகாது.

* இட்லிக்கு மாவு அரைக்கும் போது உளுந்து அதிகமாகிப் போய் இட்லி மிகவும் அமுங்கி மெல்லியதாக இருந்தால் சிறிதளவு ரவையை தண்ணீரில் பிசிறி ஊற வைத்து மாவுடன் கலந்து இட்லி வார்த்தால் பந்து பந்தாக மெதுவாக இருக்கும்.

* முருங்கை இலையை உருவியபின் எஞ்சி நிற்கும் ஈக்குகளை வீணாக்க வேண்டாம். அவைகளை நறுக்கி மிளகு ரசத்தில் போட்டுக் கொதிக்க வைத்து உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் கை, கால், உடல் அசதிகள் நிற்கும். உடலில் பலமும் ஏறும்.

   

Wednesday, February 4, 2009

நண்டு மசாலா


தேவையான பொருட்கள் :

நண்டு - 2 பெரியது

தேங்காய் (துருவியது) - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 15

மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/8 டீ ஸ்பூன்

சீரகம் - 1/ டீ ஸ்பூன்

எண்ணெய் - தேவைக்கு

கடுகு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கு


செய்முறை:

நண்டை நன்றாகக் கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் சிறிது வதங்கிய பின் நண்டைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்பு வாணலியை மூடி வைத்து தீயை மெலிதாக வைக்கவும். இடைஇடையே கிளறி விடவும். 15 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். நண்டில் இருக்கும் தண்ணீர் வற்றி வரண்டு வரும்போது தீயை அணைத்து விடவும். சாதத்துடன் பரிமாற நண்டு மசாலா தயார்.