Tuesday, July 22, 2008

உபயோகமான சில சமையல் குறிப்புகள்

சில சமையல் குறிப்புகள் நமக்கு மிகவும் உபயோகமானதாக இருக்கும். அந்த சமையல் குறிப்புகளை எல்லாம் தொகுத்து இங்கு வழங்கியுள்ளேன். இவை படித்ததில் பிடித்தது. நானும் இனிமேல் தான் உபயோகப்படுத்திப் பார்க்க வேண்டும்.
* புதிதாய் அரைத்த தோசை மாவில் உடனே தோசை ஊற்றினால் தோசை சுவையாக இருக்காது. அந்த மாவில் புளித்த தயிர் ஊற்றி 10 நிமிடங்கள் கழித்து ஊற்றினால் தோசை மொறு மொறுவென்று இருக்கும்.

* கட்லட் செய்யும் போது பிரட்தூள் இல்லாவிட்டால் அதற்கு பதில் ரவையை நெய்யில் வறுத்து விட்டு உபயோகிக்கலாம்.

* தயிர் சாதத்தில் கடுகுக்கு பதில் ஓமம் சேர்த்து தாளித்தால் மணமாகவும், சுவையாகவும் இருக்கும். இது அஜீரணத்திற்கு நல்லது.

* சேப்பங்கிழங்கு, கத்திரிக்காய் இவற்றை வதக்கும் போது கொஞ்சம் கடலை மாவைத் தூவி வதக்குங்கள். கொழகொழவென்று சேராமல் சிவந்து முறுமுறுவென்று ஆகும். எண்ணெயும் அதிகம் வேண்டாம்.

* பருப்பு வேக வைக்கும் போது சிறிதளவு எண்ணெயையோ அல்லது இரண்டு பல் பூண்டையோ போட்டால் பருப்பு வெகுவிரைவில் வெந்து விடும்.

* பச்சை பட்டாணியை வேக வைக்கும் போது ஒரு தேக்கரண்டி சர்க்கரையும் சேருங்கள். ஓன்று போல் பட்டாணி வேகும். அதன் நிறமும் மங்காது.

* பாலை உறைக்கு ஊற்றும் போது அதில் கொஞ்சம் அரிசிக்கஞ்சியை கலந்தால் பெயர்த்து எடுக்கும்படி கெட்டித் தயிராக மாறிவிடும். ( இப்போ எங்கேங்க அரிசிக்கஞ்சி?????? எல்லாமே ரைஸ் குக்கர் மயம் தானே?????? )

* குழம்பு தண்ணியாக இருந்தால் அதில் ஒரு டீஸ்பூன் சோளமாவை, கால் டம்ளர் தண்ணீரில் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். குழம்பு கெட்டியாகி விடும்.

*உளுந்து சாதம் (BlackGramDhalRice) செய்யும் போது குக்கரில் செய்வதை விட 
மண்பானையில்செய்தால் மிகவும் ருசியாகவும் நன்கு குழைந்து 
வெண்பொங்கல் பதத்தில்நன்றாக வரும்.உளுந்து சாதம் செய்முறை இங்கே பார்க்கவும்.

Thursday, July 17, 2008

சென்னா கூனி (Baby Shrimp) பொரியல் :-

சென்னா கூனியை விரும்பாத ஆட்கள் கிடையாது. சில காலங்களில் மட்டுமே கிடைக்கும் இந்த சென்னா கூனி சிறிய இறால் வகையைச் சார்ந்தது. சென்னா கூனியை முருங்கை இலையுடன் சேர்த்து சமைப்பது தான் எங்கள் ஊர் வழக்கம். முருங்கை இலை இரும்புச்சத்துக்கு பெயர் போனது. முருங்கை இலை பொரியல் சிறிது கடுப்பு தன்மை கொண்டதால் சிலர் அதை விரும்பமாட்டார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு சென்னா கூனியும் முருங்கை இலையும் சேர்த்து பொரியல் செய்து கொடுத்தால் விரும்பி உண்பார்கள். முருங்கை இலையின் கடுப்பும் தெரியாது அதே சமயத்தில் இது மிகுந்த சத்தானதும் கூட.


தேவையான பொருட்கள் :

சென்னா கூனி - 250 கிராம்

முருங்கை இலை(உருவியது) - 1 1/2 கப்

தேங்காய் (துருவியது) - 1/2 கப்

சின்ன வெங்காயம் - 15

மிளகாய் தூள் - 1/2 டீ ஸ்பூன்

மஞ்சள் தூள் - 1/8 டீ ஸ்பூன்

சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்

எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

கடுகு - சிறிது

கறிவேப்பிலை - சிறிது

உப்பு - தேவைக்கு

செய்முறை:

சென்னா கூனியை கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். சின்ன வெங்காயத்தை பொடியாக நறுக்கிக்கொள்ளவும். தேங்காய், இரு சின்ன வெங்காயம், சீரகம், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து பரலாக அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை சேர்த்து பின்பு நறுக்கி வைத்துள்ள சின்ன வெங்காயத்தைச் சேர்க்கவும். வெங்காயம் சிறிது வதங்கிய பின் சென்னா கூனி மற்றும் முருங்கை இலையைச் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் வதக்கவும். பின்பு அரைத்து வைத்துள்ள தேங்காய் கலவை மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். இரண்டு நிமிடங்கள் கிளறவும். பின்பு வாணலியை மூடி வைத்து தீயை மெலிதாக வைக்கவும். இடைஇடையே கிளறி விடவும். 15 நிமிடங்கள் அடுப்பில் வைத்திருக்கவும். கூனி வறண்டு நல்ல மணம் கொடுக்கும். அப்பொழுது தீயை அணைத்து விடவும். சாதத்துடன் பரிமாற கூனி தயார். மீன்

Friday, July 11, 2008

மீன் குழம்பு (Fish Curry) :-


கடற்கரை மாவட்டம் என்பதாலோ என்னவோ கன்னியாகுமரி மக்கள் அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவு மீன். கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்யப்படும் உணவுகளில் தேங்காய் மிகவும் பயன்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு வகையான சமையல் செய்யப்படுகிறது. அதைப் போன்றே தமிழ் நாட்டிலும் ஒவ்வொரு மாவாட்டத்திலும் வித்தியாசமான சமையல் செய்யப்படுகிறது. இந்த மீன் குழம்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் செய்யப்படும் சமையல் வகையாகும். இனி இந்த மீன் குழம்பு செய்ய தேவையான பொருட்கள் மற்றும் செய்முறை பற்றி பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
மீன் - 500gms
தேங்காய் - 3/4 கப்
சின்ன வெங்காயம் - 4
பூண்டு - 5 பல்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
மிளகு - 1/2 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
ஓமம் - 1/4 டீஸ்பூன்
தனியா தூள் - 4 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4டீஸ்பூன்
புளி - நெல்லிக்காய் அளவு
உப்பு - தேவைக்கு
கடுகு - 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது

செய்முறை :
மீனைக் கழுவி சுத்தம் செய்து அதைத் துண்டுகளாக்கிக் கொள்ளவும். புளியை 1/2 கப் நீரில் ஊற வைக்கவும். தேங்காயுடன் சின்ன வெங்காயம், பூண்டு, சீரகம், மிளகு, வெந்தயம், ஓமம், தனியா தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் இவற்றை சேர்த்து அரைத்துக் கொள்ளவும். சுத்தம் செய்து துண்டுகளாக்கி வைத்திருக்கும் மீனுடன் அரைத்த கலவையை சேர்க்கவும். அதனுடன் ஊற வைத்திருக்கும் புளியைக் கரைத்து வடிகட்டிய நீர், 1 1/2 கப் நீர் மற்றும் உப்பைச் சேர்த்து அடுப்பில் வைக்கவும். கொதிக்கும் வரை தீயை நன்கு வைத்து கொதித்த பின்பு தீயை குறைத்து வைக்கவும். குறைந்தது 20 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும். குழம்பு வற்றி வரும் போது தீயை அணைத்து விடவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு தாளித்து கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து குழம்பில் சேர்க்கவும். மீன் குழம்பு தயார்.

Sunday, July 6, 2008

புதுப் பொலிவுடன்.....

வலைப் பூவின் அமைப்பை மாற்றி அமைத்து புதுப் பொலிவுடன் அமைத்தாகிவிட்டது. வலைப் பூவின் அமைப்பு புதுப் பொலிவு பெற்றது போல வலைப் பூவில் பதிவிடும் பதிவுகளும் புதுப் பொலிவுடன் அமையும் என்பதில் எவ்வித ஐயமும்மில்லை. ஆரோக்கிய குறிப்புகள், அழகுக்குறிப்புகளுடன் எனக்கு தெரிந்த சமையல் வகைகளையும் பதிவிடலாம் என்றிருக்கிறேன்.

Thursday, July 3, 2008

அத்திப்பழத்தின் சிறப்பு :


இன்றைய இள வயதினரிடையே காணப்படும் மிகப் பரவலான நோய் ரத்தசோகை எனப்படும் ரத்தக்குறைபாடு. இதற்கு காரணம் தவறான உணவு பழக்க வழக்கங்களே. உப்பு, புளிப்பு, காரம் மிகுந்த உணவுகளும் அளவிற்கு அதிகமான மது பழக்கமும் ரத்தசோகையை ஏற்படுத்தும். இந்நோய் ஏற்படாமல் இருக்கவும் , இந்நோய் பாதிக்கப்பட்டவர்களுக்கும் அத்திப்பழம் சிறந்த மருந்தாகிறது. உலர்ந்த அத்திப்பழம் அதிக மருத்துவ குணம் வாய்ந்தது. ரத்தத்தை சுத்தப்படுத்தி அதிகரிக்கச் செய்கிறது.

அத்திபழத்தில் இரும்புச்சத்து ஒரு கிராம் அளவு உள்ளது. கால்சியம், மற்றும் பாஸ்பரஸ் தாதுக்களும் நிறைந்து உள்ளதால், எலும்பு வளர்ச்சிக்கும், பலத்திற்கும் உதவுகிறது. இளம் பெண்கள் முதற்கொண்டு மாதவிடாய் காலம் முடிவுறும் நிலையில் உள்ள பெண்கள் வரை தினம் அத்திப்பழத்தை இரவு நீரில் ஊற வைத்து காலை எழுந்தவுடன் நீரை குடித்து பழத்தை மென்று சாப்பிட மாதவிடாய் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நீங்கும். கருத்தரிப்பில் உண்டாகும் பிரச்சினைகள் அகலும். கர்ப்ப காலங்களில் பல பெண்களுக்கு மலச்சிக்கல் ஏற்படும். அவர்கள் தினம் ஊற வைத்த அத்திபழம் சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்குவதுடன் உடலுக்கு வேண்டிய தாதுவையும் எளிதாக பெறமுடியும். சரிவர பசி எடுக்காத குழந்தைகளுக்கு இதை கொடுக்க அவர்கள் பசி எடுத்து உண்பார்கள். சுறுசுறுப்பாக இயங்குவார்கள். நாட்பட்ட வறட்டு இருமல் உள்ள குழந்தைகளுக்கும் கொடுக்கலாம்.

அவார்ட்:

"You make my day" என்ற அவார்டை இல்லத்தரசி அவர்கள் நமக்கு கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி!!! இந்த அவார்டை நான் இல்லத்தரசிக்கே வழங்குகிறேன். இல்லத்தரசியின் இந்த ஊக்கத்திற்கு நன்றி.

Wednesday, July 2, 2008

அவார்ட் ஆப் பிரெண்ட்ஷிப்


இல்லத்தரசி அவர்கள் " அவார்ட் ஆப் பிரெண்ட்ஷிப் " கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி சொல்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்கள் மேலும் பல அவார்டுகள் பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன். நான் இந்த அவார்டை எனக்கு நெருங்கிய தோழியான இல்லத்தரசிக்கு தருவதில் மகிழ்ச்சி அடைகிறேன். இல்லத்தரசி எனக்கு பலவிதங்களில் ஊக்கம் கொடுத்துள்ளார்கள். அவர்களிடமிருந்து பல நல்ல விசயங்களைக் கற்றுள்ளேன். இல்லத்தரசி உண்மையிலே ஒரு பல் திறன் கொண்ட பெண்மணி. அவர்கள் எனக்கு தோழியாக கிடைத்ததில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி இல்லத்தரசி!!!!!!!!!!