Thursday, August 28, 2008

தக்காளித் திருவிழா:

தினமலர் நாளிதழில் வெளிவந்திருந்த, ஸ்பெயினில் நடைபெற்ற தக்காளித் திருவிழா புகைப்படங்களைப் பார்த்த போது எனக்கு மிகவும் வித்தியாசமாகவும் விநோதமாகவும் தோன்றியது. அந்தப் புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு.



Friday, August 22, 2008

மரவள்ளிக் கிழங்கு மசியல்

மரவள்ளிக் கிழங்கு நமது நாட்டில் விளையும் கிழங்குகளில் ஓன்று. இந்த மரவள்ளிக் கிழங்குகளிலே பல்வேறு வகை இருக்கின்றதாகக் கேள்விப்பட்டிருகிறேன். எனக்குத் தெரிந்த ஒரே மரவள்ளிக் கிழங்குவகை நூறு முட்டன் மட்டுமே. நூறு முட்டன் மரவள்ளிக் கிழங்கு எளிதாக வேகும் தன்மை கொண்டது. அதனால் தானோ என்னவோ எங்கள் ஊர் பக்கங்களில் நூறு முட்டன் மரவள்ளிக் கிழங்கு வகைகளையே பெரும்பான்மையோர் பயிருடுகின்றனர்.
மரவள்ளிக் கிழங்குக்கு தொட்டுக் கொள்ள மீன் குழம்பு தான் சரியான ஓன்று என்பது என் கருத்து . மரவள்ளிக் கிழங்கு + மீன் குழம்பு ருசியை அடிச்சிக்க முடியாது. ஒரு காலத்தில் எங்கள் ஊரில் உள்ள ஏழை மக்கள் அரிசி வாங்க முடியாத நிலையில் உள்ள மக்கள் வெறும் மரவள்ளிக் கிழங்கு + மீன் ( அந்த காலத்தில் மரவள்ளிக் கிழங்கு, மீன் மலிவாக இருந்திருக்கலாம் ) மட்டுமே சாப்பிட்டு வந்தார்கள் என்று பெரியவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். மரவள்ளிக் கிழங்கு + மீன் இரண்டும் மிகுந்த சத்து நிறைந்ததாகவே கருதுகிறேன். " மீனும் கிழங்கும் சாப்பிட்டு வளர்ந்த உடம்பு. இதை ஒன்றும் செய்ய முடியாது " என்ற வீர வசனங்களையும் பெரியவர்கள் வாயிலிருந்து கேட்டிருக்கிறேன்.
இந்தக் கிழங்கை வேக வைத்து சாப்பிடும் பொது தொட்டுக் கொள்ள தேங்காய்த் துவையல், காய்ந்த மிளகாய் துவையல், மீன் குழம்பு போன்றவை ஏற்றதாக இருக்கும். மரவள்ளிக் கிழங்கு மசியல் செய்தால் தொட்டுக் கொள்ள எதுவும் இல்லாமலே சாப்பிடலாம். இந்த மசியல் மிகவும் எளிதாக செய்யக்கூடிய ஓன்று. இனி செய்முறையைப் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :
மரவள்ளிக் கிழங்கு - 1 ( சிறியது )
தேங்காய்த் துருவல் - 1/4 கப்
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - 1 டேபில்ஸ்பூன்
கடுகு - சிறிது
கறிவேப்பிலை - சிறிது
காய்ந்த மிளகாய் - 1
செய்முறை:
மரவள்ளிக் கிழங்கை தொலுரித்து சிறு துண்டுகளாக்கிக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் மரவள்ளிக் கிழங்கு துண்டுகளை போட்டு அவை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் விட்டு வேக வைக்கவும். பாதி வெந்த பிறகு உப்பு சேர்க்கவும். கிழங்கு நன்கு வெந்த பிறகு அடுப்பை அணைத்து விட்டு தண்ணீரை வடிகட்டவும். தேங்காய்த் துருவலை கிழங்குடன் சேர்த்து ஒரு கரண்டியின் உதவியுடன் நன்கு மசிக்கவும். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு கடுகு தாளிக்கவும். பின்பு அதனுடன் காய்ந்த மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்க்கவும். தாளித்த கலவையை மசித்து வைத்திருக்கும் கிழங்கில் சேர்க்கவும். எண்ணெய் சேர்க்க விரும்பாதோர் தாளிக்காமலே தேங்காய் சேர்த்து மசித்து வைத்திருக்கும் கிழங்கை சாப்பிடலாம். ருசியாகவே இருக்கும்.

Wednesday, August 13, 2008

தித்திக்கும் தேன்

தேனை விரும்பாதோர் இல்லை. பொதுவாக இனிப்பு உடலுக்கு தீங்கானது என்பதை நாம் அறிவோம். ஆனால் தேன் இனிப்பு சுவை உடையதாக தெரிந்தாலும் உண்மையில் அது காரத் தன்மை கொண்டது. தேனில் 80% காரம் மற்றும் 20% அமிலம் கலந்து உள்ளது. தேனை அருந்தியவுடனே அது இரத்தத்தில் கலக்கும். விளையாட்டுத் துறை அன்பர்கள் இழந்த சக்திகளை உடனடியாக மீட்டுத்தரும் வல்லமை தேனில் உள்ளது. கழிவே இல்லாத உணவு தேன்.

தேன் பல்வேறு மருத்துவக் குணங்களைக் கொண்டுள்ளது. கண் ஒளியைக் கூட்டும் சக்தி தேனில் உள்ளது. உடல் பருமன், தொப்பை உடையவர்கள் சுடு தண்ணீரில் எலுமிச்சை பழச் சாறுடன் தேன் கலந்து காலை வேளையில் அருந்தி வர நல்ல பலன் கிடைக்கும். நோஞ்சான் அன்பர்கள் தேனை தினமும் இரவு பாலுடன் அல்லது நீரில் கலந்து அருந்தி வர உடல் எடை பெறுவர். இதயம், ஈரல் போன்றவை பலம் பெறும். நோயாளிகள், சிறுவர்களுக்கு ஏற்ற உணவு இந்த தேன்.

தேனை எவ்வாறு சாப்பிட வேண்டும், எவற்றுடன் தேன் சேரக்கூடாது என்பதை இனி பார்க்கலாம்.
* தேனை மட்டும் தனியாக உறிஞ்சி சாப்பிடக்கூடாது.
* தண்ணீரில் அல்லது பழச்சாறுகளில் கலந்து தான் சாபிடவேண்டும்.
* தேன் சூடானால் சத்துக்களை இழந்து விடும். எனவே தேனை சூடாக்கக்கூடாது.
* தேனும் நெய்யும் கலக்கக்கூடாது. கலந்தால் நஞ்சாகும்.
* தேனும் முட்டையும் கலக்கக்கூடாது.
* தேனும் சீனியும் கலக்கக்கூடாது.

அவார்ட்:

ஸ்ரீப்ரியா அவர்கள் " Rocking Girl Blogger " அவார்ட் கொடுத்துள்ளார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி !!!! நான் இந்த அவார்டை இல்லத்தரசி அவர்களுக்கு அளிக்க விரும்புகிறேன்.